தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா
Image caption தமிழக முதல்வர் ஜெயலலிதா

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை கே.வி.இராமலிங்கம் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது,

சாத்தூர் தொகுதி அ இஅதிமுக சட்டமன்ற உறுப்பினரும் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் புதிய இளைஞர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.

செருப்பு

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று உருவான அமைச்சரவையிலும் உதயகுமார் இடம்பெற்றிருந்தார். அப்போது அவரிடம் தகவல் தொழில் நுட்பத்துறை ஒப்படைக்கப்பட்டிருந்தது. அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இவர் சட்டமன்றம், கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணியாமல்தான் சென்று வந்தார்.

அம்மாவே என் தெய்வம். அவர் இருக்கும் இடம் கோவில். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை. அதுபோல எனக்கு தெய்வமாக விளங்கும் அம்மா இருக்கும் இடம்தான் எனது கோவில் என விளக்கமளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் உதயகுமார். பின்னர் முதல்வரே கடிந்துகொண்டதால் காலணிகள் பயன்படுத்தத்தொடங்கியதாகவும் அவர் கூறினார். ஆனால் ஆறு மாதங்களிலேயே உதயகுமார் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, இப்போதுதான் மீண்டும் அமைச்சராகிறார்.

ஈரோடு மேற்கு தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இராமலிங்கத்திடமிருந்து அண்மையில்தான் பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டு அவரிடம் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒப்படைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் அவர் அ இஅதிமுகவின் ஈரோடு நகர மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் இழந்திருந்தார். அனுமதியின்றி ஆற்றுமணல் அள்ளுவது, மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் அவருக்குத் தொடர்பிருப்பதாக் செய்திகள் வெளியான நிலையிலேயே அவர் இவ்வாறு பதவிகள் இழந்திருக்கிறார் என்கின்றனர் நோக்கர்கள். ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதுமில்லை.

மேலும் இன்று திங்கள் வெளியான ஆளுநர் மாளிகை அறிவிப்பின் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு அமைச்சர் பிவி ரமணா வருவாய்த்துறை அமைச்சராகிறார். அத்துறையினை நிர்வகித்து வந்த தோப்பு வெங்கடாசலம் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு அமைச்சராகிறார். சுற்றுச்சூழல் அமைச்சர் எம்.சி.சம்பத் வணிகவரித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.