இந்திய இராணுவத் தளபதியைத் தாக்கியவர்களுக்கு நீண்டகால சிறை

தாக்கப்பட்ட லெப் ஜெனரல் பிரார்
Image caption தாக்கப்பட்ட லெப் ஜெனரல் பிரார்

இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற ஒரு மூத்த தளபதியான லெப் ஜெனரல் குல்தீப் சிங் பிராரை லண்டனில் தாக்கியவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களின் அதியுயர் வழிபாட்டுத் தலமான பொற்கோயிலில் பதுகிங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவரான கே எஸ் பிரார், தனது மனைவி மீனாவுடன் லண்டனுக்கு வந்திருந்த சமயம் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று அவர் மீதான தாக்குதல் நடைபெற்றது.

மன்தீப் சிங் சாந்து, தில்பாக் சிங் ஆகிய இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஹர்ஜித் கவுருக்கு 11 ஆண்டுகால சிறை தண்டனையும் பர்ஜீந்தர் சிங் சங்காவுக்கு பத்தரையாண்டுகளும் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இலக்கு

கடந்த 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது, குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு லெப் ஜென் பிரார் பல சீக்கிய கடும்போக்குக் குழுக்களின் முக்கிய இலக்காக இருந்தார் என்று இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

தாக்குதலுக்குள்ளான லெப் ஜெனரல் பிரார் சிறு காயங்களுடன் தப்பினார். இவரும் சீக்கிய மதத்தை பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.