பண்ருட்டி ராமச்சந்திரன் முழுநேர அரசியலில் இருந்து விலகல்

  • 10 டிசம்பர் 2013
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பண்ருட்டி ராமச்சந்திரன்
Image caption தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பண்ருட்டி ராமச்சந்திரன்

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சட்டமன்ற அணி துணைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் தனது விலகல் கடிதத்தினை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரடியாக இன்று செவ்வாய் கொடுத்தார்.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் சென்னையை அடுத்த ஆலந்தூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது உடல்நிலை காரணமாகவே தாம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக இராமச்சந்திரன் தன் கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவர்களின் ஆலோசனையில் பேரில் முற்றிலுமாக அரசியலலிருந்தே ஓய்வுபெறுவதாக தனது கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார்.

தேமுதிகவின் அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பொறுப்புக்களிலிருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

2011ஆம் ஆண்டு தேர்தல்களில் சென்னையை அடுத்த ஆலந்தூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

கடந்த சில மாதங்களாகவே அவருக்கும் விஜயகாந்திற்குமிடையே பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

சட்டமன்றத்தில் ஒரு முறை தேமுதிகவினர் வெளிநடப்பு செய்தபோது இராமச்சந்திரன் அதில் கலந்துகொள்ளவில்லை. ஒரு முறை முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியும் பேசினார்.

பல பிரச்சினைகளில் கட்சித் தலைமை தன்னைக் கலந்தாலோசிக்காமலேயே முடிவெடுத்ததாக தம் நண்பர்களிடம் அவர் வருந்தியதாக உறுதிசெய்யப்படாத ஊடக செய்திகள் உலவின.

1970களில் ஆறு ஆண்டுகள் திமுக தலைவர் மு கருணாநிதி அமைச்சரவையிலும், பின்னர் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் எம் ஜி ராமச்சந்திரன் அமைச்சரவையிலும் பணியாற்றிய பண்ருட்டி இராமச்சந்திரன், சில காலம் பாட்டாளி மக்கள் கட்சியிலும் இருந்தார். தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் அவர்.

தேமுதிகவைப் பொறுத்தவரை கடந்த சட்ட மன்றத் தேர்தல்களில் 29 இடங்களில் வென்று, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி நிலையை அது அடைந்தாலும், உட்கட்சிப் பிரச்சினைகள் காரணமாக ஏற்கெனவே ஏழு உறுப்பினர்கள் தலைமையுடன் பிணக்கு கொண்டு ஆளும் அஇஅதிமுகவை சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அதிருப்தி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர். அவர்கள் கட்சியிலிருந்து விலகவுமில்லை. விலக்கப்படவுமில்லை.

இப்போது பண்ருட்டி இராமச்சந்திரனின் விலகல் தேமுதிக கட்சிக்கு மேலுமொரு பின்னடைவாகவே கருதப்படும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.