"திமுக கூட்டணி வேண்டும் என்று ஏங்கவில்லை" -ஞானதேசிகன்

Image caption காங்கிரஸ் திமுக உறவு முறிவு --- "அதிர்ச்சியளிக்கவில்லை" -ஞானதேசிகன்

திமுக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் கூறியிருக்கிறார்.

ஞாயிறன்று சென்னையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுக பல வழிகளில் வஞ்சிக்கப்பட்டது, முன்னாள் அமைச்சர் ராசா, தனது மகள் கனிமொழி சிறை செல்ல நேரிட்டது, மனைவி தயாளு அம்மாள் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் இதற்கெல்லாம் காரணமான காங்கிரசை மன்னிக்கமுடியாது எனவே அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை எனப் பேசியதாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அது குறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கடந்த சில மாதங்களுக்கு முன், ஐநா மனித உரிமை ஆணைய அமர்வில் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை மீது பன்னாட்டு விசாரணை கோரும் பிரச்சினையில் திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு இரு கட்சிகளுக்கும் உறவு புதுப்பிக்கப்படவில்லை, எனவே இப்போதைய கூட்டணி இல்லை என்ற அறிவிப்பும் தங்கள் கட்சியை பாதிக்காது என்றார்.

" அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டுமென்று காங்கிரசில் யாரும் ஏங்கி நிற்கவுமில்லை, அவர்கள் வரவேண்டுமென்று பிரார்த்திக்கவும் இல்லை" என்றார் ஞானதேசிகன்.

தமிழகத்தில் ஏதாவது ஒரு பெரிய திராவிடக் கட்சியின் துணை இன்றி தேர்தல்கள் எதிர்நோக்கமுடியுமா எனக் கேட்டபோது அவர் வெற்றிக்கான வியூகத்தை அமைத்துக் கொள்ள காங்கிரசுக்குத் தெரியும் என்றார்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் திமுக எதிர்கொண்ட சிக்கல்களுக்கு காங்கிரசை குற்றம் சொல்லுவது தவறு, எல்லாம் நீதிமன்ற உத்தரவுப்படியே நடந்தது எனவும் அவர் வாதிட்டார்.

நேற்றைய பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி பாரதீய ஜனதாவுடனும் கூட்டணி இல்லை என்ற ரீதியில் பேசியதாகவும் முரசொலி கூறுகிறது.

இந்நிலையில் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் அதிமுக, திமுக இரண்டையுமே தவிர்த்துவிட்டு மதிமுக போன்ற சிலவற்றுடன் இணைந்து புதிய கூட்டணி உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

எப்படியும் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர் திட்டவட்டமாக.

Image caption " தேர்தலுக்குப் பின் நிலைப்பாடு குறித்து திமுக தலைமை முடிவு செய்யும்"-- டி .ஆர்.பாலு

திமுகவின் டி.ஆர்.பாலு பதில்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசின் ஆதரவைக் கேட்கும்போது இது பற்றி ஏன் திமுக யோசிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் கேட்டிருப்பது குறித்து,பதிலளித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, " இதில் முரண்பாடு ஒன்றும் இல்லை, காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் திமுக தொண்டர்களின் உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். எனவே, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோர திமுகவுக்கு உரிமை இருந்தது", என்றார்.

இதே போல உரிமை காங்கிரஸுக்கும் இருந்திருக்கும், ஆனால் அவர்கள் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் கூறினார்.

பாரதிய ஜனதா அல்லது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்குமா என்று கேட்டதற்கு பதிலளித்த பாலு, இது குறித்து திமுக தலைவர் கருணாநிதிதான் பொதுக்குழுவின் ஆலோசனையுடன் முடிவு செய்வார், இப்போது இது போன்ற ஊகங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

' மோடி அலை ஒரு பிரமை'

மேலும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஏதோ ஒரு அலை இருக்கிறது என்பது போன்ற பிரமை உருவாக்கப்படுகிறது என்று கூறிய பாலு, உண்மையில் பாஜகவால், தற்போது நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட அதிகம் பெற முடியாது என்றார்.

பாஜகவின் மிகப் பிரபலமான தலைவர் வாஜ்பாய் அவர்களாலேயே தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை என்ற போது, மோடியால் அந்த அளவுக்குக் கூட வெற்றியைப் பெற முடியாது என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், திமுகவுக்கென்று சுமார் 23 சதவீத வாக்குகளே இருக்கும் நிலையில், இந்த வாக்குகளை மட்டும் வைத்து திமுக தனியாக எப்படி நிற்க முடியும் என்று கேட்ட்தற்கு, திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி இல்லாத்தால் ஏற்படும் இழப்பை விட, அதிமுகவுக்கு தேமுதிக கூட்டணி இல்லாததால் ஏற்படும் இழப்பு அதிகம் என்றார். மேலும் திமுக தொண்டர்கள் திமுக தனித்துப் போட்டியிடும்போது காட்டும் உற்சாகமே தனி, இது திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.