லோக்பால் மசோதா: இந்திய நாடாளுமன்றம் விவாதிக்கிறது

Image caption அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் 8-வது நாளைத் தொட்டுள்ளது

இந்தியாவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்ட மசோதாவான லோக்பால் பற்றி இந்திய நாடாளுமன்றம் விவாதித்துவருகிறது.

லோக்பால் சட்டத்தைக் கொண்டுவருமாறு வலியுறுத்தி ஊழல் எதிர்ப்புச் செயற்பாட்டாளர் அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே நாடாளுமன்றம் இதுபற்றி விவாதிக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டில் அண்ணா ஹசாரே நடத்திய 12-நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக லோக்பால் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

கீழவையான லோக்சபா இந்த சட்டமூலத்தை நிறைவேற்றியிருந்தது. எனினும் மேலவை, பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் சட்டத்தை நிறைவேற்றாமலேயே சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்திருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக வெளிப்படுத்தப்பட்ட பெரும் ஊழல் மோசடிகள் குறித்த சர்ச்சைகள் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக பாதித்துள்ளது.

அண்ணா ஹசாராவின் புதிய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 8-வது நாளைத் தொட்டுள்ளது.

லோக்பால் சட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்படுவதற்கு பெரும்பான்மைக் கட்சிகள் இணங்கியிருப்பதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் கமல் நாத் கூறியுள்ளார்.