அமெரிக்காவின் பிடிவாதம் தொடர்பில் இந்தியா அதிருப்தி

Image caption தேவயானி கோப்ராகடே மீதான வழக்கை வாபஸ்பெற அமெரிக்கா மறுத்துவிட்டது

தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப்பெற முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளதை இந்தியா ஏற்க மறுத்துள்ளது.

அமெரிக்காவில் தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை நிபந்தனை இல்லாமல் உடனடியாக கைவிட இந்தியாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் வெளியுறவுத்துறைச் செயலாளர் சுஜாதா சிங்கை புதுடில்லியில் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவின் பிடிவாதம் குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்த சர்ச்சைக்கான தீர்வை காண முயன்று வருவதாக தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பை பேணி காக்க வேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

'நாங்கள் உறவை பேணி காக்க விரும்புகிறோம். நிச்சயமாக அமெரிக்காவும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பேணி காக்க விரும்பும் என நம்புகிறேன். தற்போதைய ஒரே கேள்வி என்ன வென்றால் விரும்பத்தகாத, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தான். இதற்கு கண்டிப்பாக தீர்வு கண்டே ஆக வேண்டும் என்றார் சல்மான் குர்ஷித்.

இறுதி முடிவு நல்ல முடிவாக இருக்கும் என்றும் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்திய பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் இந்தியா ஒருதலை பட்சமாக நடந்துக் கொள்வதாகக் கூறி புதுடில்லியில் போராட்டம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.