ஒருபாலுறவு குற்றம் என்னும் தீர்ப்புக்கு எதிராக மீளாய்வு மனு

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடும் ஒருபால் உறவாளர்கள்
Image caption உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடும் ஒருபால் உறவாளர்கள்

வயதுக்குவந்த இருவருக்கு இடையிலான சம்மதத்துடனான ஒருபாலுறவு குற்றம் என்கிற இந்திய தண்டனை சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லும் என்று இந்திய உச்சநீதிமன்றம் அளித்த சமீபத்திய தீர்ப்புக்கு எதிராக இந்திய அரசு மீளாய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

வயதுக்குவந்த இருவருக்கு இடையிலான சம்மதத்துடனான ஒருபாலுறவு குற்றம் என்கிற இந்திய தண்டனை சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லும் என்று இந்திய உச்சநீதிமன்றம் அளித்த சமீபத்திய தீர்ப்புக்கு எதிராக இந்திய அரசு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

ஒருபாலுறவு என்பது “இயற்கைக்கு முரணான உறவு” என்கிற பட்டியலின் கீழ் குற்றத்திற்குரிய செயல் என்று கூறும் இந்திய தண்டனை சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லாது என்று டில்லி உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை, இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்திருந்தது. அதன் மூலம் ஒருபாலுறவு குற்றச் செயல் என்கிற முந்தைய நிலைமையே மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அதேசமயம், இந்த குறிப்பிட்ட அரசியல் சட்டப்பிரிவை இந்திய நாடாளுமன்றம் திருத்த விரும்பினால் திருத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக இந்தியாவில் பரவலாக எதிர்ப்பும் விமர்சனமும் கண்டனங்களும் எழுந்தன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஒருபாலுறவாளர்களும் அவர்களுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்களும், அகில இந்திய அளவில் பரவலான கண்டன ஆர்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருபாலுறவாளர்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதிப்பதுடன், எச்ஐவி உள்ளிட்ட பால்வினை நோய்களை தடுப்பதில் மிகப்பெரிய தடைக்கல்லாக அமையும் என்றும் கவலைகள் வெளியிடப்பட்டன. இந்த பின்னணியில், உச்சநீதிமன்றம் ஒருபாலுறவு குற்றச் செயல் என்கிற தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று இந்திய நடுவணரசு கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்திருக்கிறது.

இந்திய நடுவணரசின் இந்த முன் முயற்சியை வரவேற்பதாக, ஒருபாலுறவு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.