'பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை'-மன்மோஹன் சிங் அறிவிப்பு

Image caption பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை--மன்மோஹன் சிங்

இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் தான் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

எதிர்வரும் மே மாதத்தில் நடக்கவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வென்றால், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று டில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி, பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பெயரை , ஒரு பொருத்தமான நேரத்தில் அறிவிக்கும் என்று கூறிய அவர், கட்சியின் துணைத்தலைவர், ராகுல் காந்திக்கு இந்த பதவிக்குரிய அனைத்து தகுதிகளும் இருக்கின்றன என்றார்.

'அரசின் சாதனைகள்'

தனது பத்தாண்டு ஆட்சியின் சாதனைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளுக்கும், கிராமப்புற ஏழைகளுக்கும் தனது ஆட்சி பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தது என்று கூறிய அவர், கல்வித் துறையிலும் பல சாதனைகளை அரசு படைத்தது என்றார்.

அரசாங்கத்தின் பணியை மேலும் வெளிப்படையானதாக்க தனது அரசு கொண்டு வந்த சட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

'நரேந்திர மோடி பிரதமராவது அழிவை ஏற்படுத்தும்'

Image caption 'நரேந்திர மோடி பிரதமராவது பேரழிவை ஏற்படுத்தும்' மன்மோஹன் சிங்

எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராவது, இந்தியாவுக்கு பேரழிவைத் தரும் என்று மன்மோஹன் சிங் கூறினார்.

அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படும்போது அரசின் தலைவராக இருந்த ஒருவர் பிரதமராக வரக்கூடாது என்றார் அவர்.

( குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையின் கீழான பாஜக அரசின் ஆட்சியில்தான் 2002ல் நடந்த கலவரங்களில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டனர்.அவர்களில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நரேந்திர மோடி இந்தக் கலவரங்களில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றே கூறி வந்துள்ளார். )

மன்மோஹன் சிங் நரேந்திர மோடி குறித்து தெரிவித்த கருத்துக்களை எதிர்க்கட்சியான பாஜக கண்டனம் செய்திருக்கிறது. நரேந்திர மோடி நாட்டிற்கு குஜராத்தை ஒரு "முன்னேற்ற முன் மாதிரியாக" உருவாக்கியிருக்கிறார் என்று அது கூறியிருக்கிறது.

மன்மோகன் சிங்கின் கூட்டணி அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த சர்ச்சைகளை எதிர்கொண்டாலும், மன்மோகன் சிங் தனது நற்பெயரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.