'இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இல்லை என்பது தவறு': மன்மோஹன்

Image caption மீனவர் பிரச்சனை தீர வடக்கு மாகாண அரசும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் பேசுவது தான் ஒரே வழி என்கிறார் பிரதமர்

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைளுக்கு தீர்வுகாண்பதற்காக இலங்கை அரசாங்கத்தை இணங்கச்செய்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் மூன்றாவது செய்தியாளர் சந்திப்பு டில்லியில் இன்று நடந்தது.

அதன்போது, இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக இந்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேசும் என்றும் கூறினார்.

தமிழக மீனவர் பிரச்சனை பற்றி பேசிய பிரதமர், 'நாங்கள் பல தடவைகள் இலங்கை அரசாங்கத்துடன் பேசியிருக்கிறோம்' என்று கூறினார்.

'இப்போது வடக்கு இலங்கையில் தமிழர்களே அரசாங்கம் அமைத்துள்ளார்கள். எனவே இலங்கையிலுள்ள தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒன்றாக அமர்ந்து பேசி இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளையும் தீர்வுகாணமுடியும்' என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

வடக்கு-இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் பேசுவதே இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு இருக்கின்ற 'ஒரேவழி' என்றும் இந்தியப் பிரமர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.