கோவாவில் கட்டிடம் இடிந்ததில் குறைந்தது 13 பேர் பலி

Image caption விபத்தில் சிக்கியவர்களைப் போலிசார் மீட்கின்றனர்

இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான, கோவாவில், கட்டப்பட்டுவரும் நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது 13 கட்டுமானத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

கோவா மாநிலத்தின் கடற்கரையோர நகரான கனக்கோனாவில் நடந்த இந்த விபத்தில் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சம்பவம் நடந்தபோது குறைந்தது 40 தொழிலாளர்கள் அந்த இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த ஐந்து அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

Image caption இடிந்த கட்டிடம்

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவா முதல் அமைச்சர் ரமேஷ் நாயக் கூறியதாக செய்தி நிறுவனங்கள் கூறின.

மீட்புப் பணிகளில் உதவ ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த செப்டம்பரில் மும்பையில் ஒரு நான்கு அடுக்குக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர்.

கட்டுமான விதிகள் சரியாக அமலில் இல்லாதது, இந்தியாவில் இது போன்ற கட்டிட விபத்துக்கள் அடிக்கடி நடக்க காரணமாக இருக்கின்றது.