தில்லை வழக்கு: அதிமுக அரசு அலட்சியம் என திமுக குற்றச்சாட்டு

சிதம்பரம் கோவில்
Image caption சிதம்பரம் கோவில்

சிதம்பரம் நடராஜர் ஆலயம் தொடர்பான வழக்கில் அஇஅதிமுக அரசு போதிய அக்கறை காட்டாததால்தான் இந்திய உச்சநீதிமன்றம் அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினை கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை இரத்து செய்துவிட்டது என திமுக தலைவர் மு கருணாநிதி குறை கூறியிருக்கிறார்.

கடந்த 2009-ல் திமுக ஆட்சி காலத்தின் போது தமிழக அரசால், கோயிலின் பணிகளை மேற்பார்வையிட அதிகாரி ஒருவரை நியமித்து உத்திரவிட்ட ஆணை செல்லாது, ஆனால் தீட்சதர்கள் நிர்வாகத்தின் மீது புகார் கூறப்படும் பட்சத்தில், அந்தப் புகார்களை விசாரிக்க தற்காலிக அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு எனவும் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது குறித்து இன்று செவ்வாய் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்திரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்பேயே எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். "கோயிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலேயே கோயிலுக்குச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்" என்று அப்போது அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது என நினைவுகூர்ந்திருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கெதிராக தீட்சதர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் நிலையிலேயே தானும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணியும் உடனடியாக தமிழக அரசு வீண் கால தாமதம் செய்யாமல், மூத்த வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்ததை இன்றைய தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் கருணாநிதி, ஆனால் அஇஅதிமுக அரசு "என்ன காரணத்தாலோ" இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே நேற்றைய தீர்ப்பு எனக்கூறியிருக்கிறார்.