ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உதகையில் வனவிலங்குத் தாக்குதலில் இருவர் பலி

Image caption தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்த காலடித் தடம்

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத் தலைநகரான உதகமண்டலத்துக்கு அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியப் பிரதேசத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். புலி அல்லது சிறுத்தை இவர்களைக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தாக்குதலை நடத்திய மிருகத்தை பிடிப்பதற்கு அரசு உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக, திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அந்தக் காட்டுப்பகுதியில் வனத்துறையினருடன் இணைந்து ஆய்வுகளை நடத்தித் திரும்பியுள்ள நீலகிரி மாவட்ட வன உயிர் கழகத்தைச் சேர்ந்தவரும், புலிகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவருமான விஜய் கிருஷ்ணராஜ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட விதம் மற்றும் காலடித் தடங்களைப் பார்க்கும்போது, தாக்குதலை நடத்திய மிருகம், பசியுடன் இருக்கும் ஒரு வயதான புலியாக இருக்கக் கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

காலடித் தடங்கள் குறித்த ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும், அதன் முடிவு தெரிந்த பிறகே அது புலியா அல்லது சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும் எனவும் விஜய் கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் ஊட்டிக்கு அருகிலுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு அருகிலுள்ள காட்டு எல்லையில் நடைபெற்றுள்ளது.