சென்னை உயநீதிமன்ற நீதிபதிகள் பரஸ்பரம் பரபரப்பு புகார்

சென்னை உயநீதிமன்றம்
Image caption சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ் கர்ணனை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றிவிடவேண்டுமென வலியுறுத்தி சென்னை தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி சதாசிவத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கான எதிர்வினையாக, நீதிபதி கர்ணன், நீதிபதி அகர்வால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக்கோரி தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திடம் மனுச்செய்திருக்கிறார்.

நீதிபதி கர்ணனுக்கு எதிராக நீதிபதி அகர்வால் எழுதியிருக்கும் கடிதத்தில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி நீதிபதி கர்ணன் தன்னை சந்தித்து, தன்னை ஒரு குடிகாரர், பெண் பித்தர், சாதி வெறியர், ஊழல்பேர்வழி என்றெல்லாம் வசை மாரி பொழிந்து பதவி விலகவேண்டுமென எச்சரித்ததாகக் குற்றஞ்சாட்டுகிறார்.மேலும் சில குறிப்பிட்ட வழக்குகளை விசாரிக்கும் பணியை உடனடியாக தமக்கு ஒதுக்கும்படி நீதிபதி கர்ணன் கோரியதாகவும் அகர்வால் தெரிவிக்கிறார்.

தவிரவும் தான் பதவியேற்ற நாளில் இருந்தே சக நீதிபதிகளிடம் இருந்தும், வழக்கறிஞர்களிடமிருந்தும் நீதிபதி கர்ணன் மீது ஏராளமான புகார்கள் வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். பொது நலன் கருதியும், நீதிமன்றத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து நடந்துவரும் நீதிபதி கர்ணனை இடமாற்றம் செய்யவேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்திடம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் கோரியிருக்கிறார்.

தலைமை நீதிபதி அகர்வால் கடிதம் தொடர்பில் நீதிபதி கர்ணன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் பட்டியலினத்தவர் ஆணையத்திற்கு அவர் அனுப்பியிருக்கும் மனுவின் பிரதிகள் செய்தியாளர்கலுக்கு வழங்கப்பட்டன.

கரூர் மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை திறந்து வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றியும் பெறவிருந்த நிலையில் தன்னிடமிருந்து கரூர் மாவட்ட வழக்குப் பொறுப்புக்களைப் பறித்து, ஒரு சாதி இந்துப் பெண் நீதிபதியிடம் ஒப்படைத்து, புதிய வளாகத்தினைத் திறந்து வைக்கும் பெருமை தனக்கு கிடைக்கவிடாமல் செய்து தன்னை அகர்வால் அவமானப்படுத்திவிட்டார் என்றும் எனவே வன் கொடுமை சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நீதிபதி கர்ணன் கோரியிருக்கிறார்.

நீதிபதி கர்ணன் தன்னை இழித்துப் பேசியதாக அகர்வால் குறிப்பிடும் நாளன்றுதான், புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த வழக்கு விசாரணையில் திடீரென குறுக்கிட்டு நீதிபதி கர்ணன் உயர்நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட புதிய நீதிபதிகளின் பட்டியல் நியாயமானது அல்ல என வாதிட்டு, தானும் மனுதாக்கல் செய்யவிரும்புவதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இரண்டாண்டுகளுக்கு முன் ஒருமுறை கர்ணன், தாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் சக நீதிபதிகள் தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும் பல்வேறு வகைகளில் தனக்குத் தொந்தரவு அளிப்பதாகவும் புகார் கூறியும், இதில் தனக்கு நீதி கோரியும் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திடம் மனுச் செய்திருந்தார் என்பதையும் செய்தியாளர்கள் நினைவுகூர்கிறார்கள்.