கடற்கரையிலுள்ள சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் ஒப்புதல்

சிவாஜிகணேசன் சிலை
Image caption சிவாஜி கணேசன் சிலை

போக்குவரத்திற்கு இடையூறாயிருப்பதால் மெரினா கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசனின் சிலையினை அகற்றுமாறு சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிற்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதிகள் சதீஷ் அக்னிஹோத்ரி, கே.கே. சசிதரன் அமர்வு எவ்வளவு விரைவில் அச்சிலையை அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவில் அகற்றலாம் என்று கூறியிருக்கிறது.

காமராஜர் சாலை சந்திப்பில் எழுப்பப்பட்டுள்ள அச்சிலையினால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன எனவே அந்த சிலையை அகற்றவேண்டுமென சென்னையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

சிலையை அகற்றக் கூடாது என சிவாஜி கணேசன் சமூகப்பேரவை மனு தாக்கல் செய்தது.

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட நடிகர் சிவாஜி கணேசனின்முழுஉருவச் சிலையால் சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன, எனவே அதனை அங்கிருந்து அகற்றிவிடலாம் என சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூறியது.

2012ம் ஆண்டு அந்த இடத்தில் 12விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. நடப்பாண்டில் இதுவரை 8 விபத்துக்கள் நடந்துள்ளன என கடந்த நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறையின் மனு கூறியது.

வாகனங்கள் காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்குத் திரும்பும்போதும், ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து வலது புறமாக கடற்கரை சாலைக்குத் திரும்பும் போதும், இந்த சிவாஜிசிலை போக்குவரத்து சிக்னலை மறைக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சிலையை மெரினா கடற்கரையில் வேறொரு இடத்திற்கு மாற்றிவிடலாம் என்றும் சாலை போக்குவரத்து நலன் கருதி இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

சாலை என்பதே அதனைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்காகவே தவிர சிலை எழுப்ப அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சிவாஜியின் சிலை நிறுவப்படும்போதே பல்வேறு முட்டுக்கட்டைகளுக்குப் பின்னரே ஒருவழியாக கடற்கரை சாலையில் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 2006 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.