ரான்பாக்ஸி மருந்து நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தன

படத்தின் காப்புரிமை getty images
Image caption ரான்பாக்ஸி நிறுவனத்தின் 3 மருந்து ஆலைகளிலிருந்து வரும் இறக்குமதிக்கு அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்துள்ளது

இந்தியாவின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரான்பாக்ஸி லேபரட்டரிஸ்- இன் சந்தைப் பங்குகள் பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளன.

இந்த நிறுவனத்தின் மருந்து தொழிற்சாலையிலிருந்து வரும் இறக்குமதிகளை அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் இடைநிறுத்தியுள்ளமையால் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரான்பாக்ஸி மருந்துக் கம்பனியின் பங்குகள் கிட்டத்தட்ட 20 வீதமளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

வடக்கு இந்திய மாநிலமான பஞ்சாப்-இல் உள்ள ரான்பாக்ஸி தொழிற்சாலை ஒன்றில் தயாரிப்பு கடுமையான விதிமுறை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு நிர்வாகம் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

அமெரிக்கா, ரான்பாக்ஸி நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இருந்துவருகிறது.

இந்த நிறுவனம் வர்த்தகப் பெயர்- முத்திரைகள் இன்றி (generic) மருந்து தயாரித்துவந்தது.

அண்மைய ஆண்டுகளில், ரான்பாக்ஸி நிறுவனத்தின் மற்ற மூன்று தொழிற்சாலைகளிலிருந்து வரும் மருந்துப் பொருட்களுக்கும் அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.