ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் பின்னி நீக்கம்

படத்தின் காப்புரிமை pti
Image caption ஆம் ஆத்மி கட்சியில் ஜனநாயகம் இல்லை--வினோத் பின்னி

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் லக்ஷ்மி நகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வினோத் பின்னி அக்கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிராக போலியான தகவல்களை கூறியதற்காக அவர் கட்சியை விட்டு விலக்கப்பட்டதாக டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. கட்சி எடுத்திருக்கும் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது என்று வினோத் பின்னி தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராடி, அரசியலை சுத்தமாக்குவதாக உறுதியளித்த அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, கடந்த மாத சட்டமன்றத் தேர்தலில், டெல்லியின் 70 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த சட்டமன்ற தேர்தல் வெற்றியிலிருந்து நம்பிக்கை பெற்ற ஆம் அத்மி கட்சி, வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும், அரவிந்த் கெஜ்ரிவாலை சர்வாதிகாரி என்றும் வினோத் பின்னி குற்றஞ்சாட்டியிருந்தார். டெல்லி அமைச்சரவையில் வினோத் பின்னிக்கு அமைச்சர் பதவி தரப்படாததாலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும், அவர் அதிருப்தியில் உள்ளதாக,அர்விந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி காவல் துறை யார் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்பது குறித்து எழுந்த சர்ச்சையால் கடந்த வாரம் மத்திய டெல்லியில் அர்விந்த கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போதைப் பொருள் மற்றும் பாலியல் தொழில் குறித்த குற்றங்கள் தொடர்பில், டெல்லி காவல் துறை நடவடிக்கைகள் எடுக்க தவறியதாக டெல்லி அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது. டெல்லி காவல் துறை அதை மறுத்துள்ளது.

முறைகேடுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு காவல் துறை அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரியிருந்தார். டெல்லி காவல் துறையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மத்திய அரசு அந்த இரண்டு அதிகாரிகளையும் விடுமுறையில் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.