ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் மனு மீது விசாரணை

Image caption கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை ரத்து செய்ய மனு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

மரண தண்டனை தொடர்பான கருணை மனுவை நிராகரிக்க இந்திய ஜனாதிபதி நீண்ட காலம் எடுத்துக்கொண்டதால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மரண தண்டனை பெற்றுள்ள முருகன் சார்பாக வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடினார்.

இதை போல் பேரறிவாளன் மற்றும் சாந்தன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் யோக்முக் சௌத்ரியும் இதே காரணங்களை நீதிமன்றத்தில் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் வரும் வாரத்தில் பிப்ரவரி 4ம் தேதி (செவ்வாய்கிழமை) அட்டர்னி ஜெனரல் வாகனவதி பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த வழக்கின் போக்கினை நேரில் காண புதுடில்லியில் முகாமிட்டுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த வழக்கு நேற்றே நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் விசாரணை இன்றுதான் நடைபெற்றது என்றார்.

அதோடு இந்திய உச்சநீதிமன்றம் சந்தனக் கடத்தல் வீரப்பன் "கூட்டாளிகள்" நால்வர் உள்பட 15 பேரின் மரண தண்டனையினை கடந்த 21ம் தேதி ரத்து செய்தது, அதை போல் இவர்களது மரண தண்டனையும் ரத்தாகும் என தனக்கு நம்பிக்கை உள்ளதாக கூறினார்.

ஆனால் இந்த வழக்கில் மத்திய அரசு மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவர்கள் இந்த வழக்கின் வேகத்தை குறைக்க முயல்வது பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது என்றார்.