சத்திஸ்கர் மாநில கோகோ பயிற்சியாளர்கள் கைது

சத்திஸ்கர் மாநில கோகோ பயிற்சியாளர்கள் கைது
Image caption சத்திஸ்கர் மாநில கோகோ பயிற்சியாளர்கள் கைது

சத்திஸ்கர் மாநிலத்தில் கோகோ (Kho Kho) விளையாட்டு வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பில், அந்த விளையாட்டு அணியின் பயிற்சியாளர் உட்பட மூன்று பேரை சத்தீஸ்கர் காவல் தூறையினர் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் என்ற இடத்தில் சத்தீஸ்கர் மாநில பெண்கள் கோகோ விளையாட்டு அணியில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட 6 பதின்ம வயதுப் பெண்கள் உள்ளிட்ட 11 வீராங்கனைகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்ச்சியாளருடன் சேர்த்து கொகோ சங்கத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த கோகோ சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜு என்பவரும், சங்கத்தின் செயலாளரான ஜக்பந்து ஜெனா என்பவரும், பயிற்ச்சியாளர் முர்லி ரெட்டி என்பவரும், அந்த வீராங்கனைகளை தங்களின் அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று பிலாய் நகரின் உயர் காவல் துறை அதிகாரி வீராந்திர சத்பதி தெரிவித்துள்ளார்.

இவர்கள் மீது அந்த 11 வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டு பின் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட வேண்டும் என்று அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிலாய் ஸ்டீல் அலை விடுதியில் அமைக்கப்பட்டிருந்த இளைய மற்றும் மூத்த கோகோ வீராங்கனைக்களுக்கான தேசிய முகாமில் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் அவர்கள் தங்கியிருந்தபோது இந்தப் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகின்றன.

அம்மாநிலத்தின் துர்க், ரஜ்னாந்த்கோன், பலோத் மற்றும் பேமேடரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த இந்த வீராங்கனைகள் இந்தத் தொந்தரவு குறித்து புகார் அளிக்க முதலில் தயங்கியதாகவும், பின்னர் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து காவல் துறையை அணுகியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டிருப்பவர்கள் தங்கள் முன்னிலையில் அந்த வீராங்கனைகளை ஆடைகளை மாற்றுமாறு வலியுறுத்தியதாகவும், விரும்பத் தகாத இடங்களில் அந்த பெண்களைத் தொட முயன்றதாகவும் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரி கூறினார். மேலும் கோகோ பயிற்சிக்கான காணொளிகளை தனது கைதொலைபேசியில் காண்பிப்பதாக கூறி, அந்த வீராங்கனைகளை ஆபாச காணொளிகளை பார்க்கவைத்ததாக மூத்த வீராங்கனை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அந்த கொகோ சங்கத்தின் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். பெண் குழந்தைகளின் மேம்பாட்டின் ஒரு முயற்சியாகக் கருதப்படும் இவ்வகையான விளையாட்டு சூழலிலும் பாலியல் தொந்தரவுப் புகார்கள் வருவது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.