சீனாவில் பெருகும் காந்தி குறித்த ஆர்வம்

காந்தி மீது புதிய சீன ஆர்வம்

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு,

காந்தி மீது புதிய சீன ஆர்வம்

இந்தியாவின் தேசப்பிதா என்றழைக்கப்படும் இந்திய சுதந்திரப் போராட்ட நாயகன் மகாத்மா காந்தியின் சுய சரிதையான 'சத்திய சோதனை' முதன் முதலாக சீன மொழியான மேண்டரினில் மொழி பெயர்க்கப்படுகிறது.

'சத்திய சோதனை' சீன மொழியாக்கம் பெறப்படுவது, சீனாவில் காந்தி குறித்த ஆர்வம் அதிகரிப்பதைக் காட்டுவதாக சீன அறிஞர்கள் கூறுகிறார்கள்.

காந்தியின் சுய சரிதையைத் தவிர, சத்யாகிரகம், மதம், அரசியல் போன்ற தலைப்புகளில் காந்தி எழுதியவையும், அவரது உரைகளும் அடங்கிய ஐந்து தொகுப்புகளும் மேண்டரினில் மொழியாக்கம் செய்யப்படவுள்ளன.

"காந்தியின் எழுத்துக்கள் பெரும்பாலும், ரஷ்யாவிலும், சீனாவிலும் கிடைப்பதில்லை. சீனாவில் காந்தியின் எழுத்துக்கள் மீது எழுந்திருக்கும் ஆர்வம் குறித்து எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது", என்று கூறினார் காந்தி அஹமதாபாதில் நிறுவிய நவஜீவன் அறக்கட்டளை என்ற பிரசுர நிறுவனத்தைச் சேர்ந்த விவேக் தேசாய்.

சீனாவில் காந்தியின் எழுத்துக்களை மொழியாக்கம் செய்ய உள்ள சீன அறிஞர்கள் குழுவுக்கு சன் யாட் சென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர் டாக்டர் ஹுவாங் யிங்ஹோங் தலைமை தாங்குகிறார். மகாத்மா காந்தியின் 80க்கும் மேற்பட்ட உரைகள் மொழி பெயர்க்கப்படும் என்கிறார் இவர்.

சீனாவில் பலர், குறிப்பாக இளைஞர்கள், காந்தியின் எழுத்துக்கள் குறித்து ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் , ஆனால் உள்ளூர் மொழியில் காந்தியின் எழுத்துக்கள் கிடைப்பதில்லை " என்றார் ஹுவாங். இந்த ஆண்டு இறுதிவாக்கில், காந்தியின் எழுத்துக்கள் மொழி பெயர்க்கப்பட்ட ஐந்து தொகுப்புகளும் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

ஏன் இந்தப் புதிய ஆர்வம் ?

"பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக காந்தி 1920ல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கமும், மக்களை அவர் ஒன்று திரட்டியதும் அப்போதைய சீன ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது" என்று கூறுகிறார் காந்தி ஆராய்ச்சியாளரும், குவாங்ஸூ நகரில் உள்ள தென் சீனப் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு ஆய்வுகள் துறையில் கற்பிப்பவருமான , பேராசிரியர் ஷாங் குவானு.

1950 வரை , காந்தி பற்றிய 27 புத்தகங்கள் மற்றும் அவர் குறித்த நூற்றுக்கணக்கான கட்டுரைகள் சீனாவில் பிரசுரிக்கப்பட்டுவந்தன. அப்போதெல்லாம் அவர் இந்தியாவின் ரூஸோ என்றும் டால்ஸ்டாய் என்றும் வர்ணிக்கப்பட்டுவந்தார் " என்கிறார் குவானு.

ஆனால் கம்யூனிசப் புரட்சிக்குப் பின்னர், காந்தியின் எழுத்துக்கள் மீதான ஆர்வம் குறைந்தது என்றும் அவர் கூறுகிறார்.

அஹிம்சை மற்றும் வர்க்க சமாதானம் போன்ற காந்தியின் கருத்துக்கள், சீனாவுக்குள் நிலவிய மார்க்சிய சித்தாந்தம் மற்றும் அரசியல் சூழல் ஆகியவைகளுடன் ஒத்துப்போகவில்லை, என்கிறார் பேராசிரியர் ஷாங்.

காந்தியும் சீனர்களும்

"மாவோவுக்கு முந்தைய சீனாவில், சீனச் சிந்தனையாளர்கள் காந்தியை சந்தித்தனர், அவர்கள் சீனாவின் பிரச்சினைகளுக்கு முடிவு காண , காந்தியை நெருக்கமாகத் தொடர்ந்தனர் ", என்கிறார் காந்தி வல்லுநரும் முன்னாள் இந்திய ராஜதந்திரியுமான, பாஸ்கல் ஆலன் நாசரேத்.

காந்தி சீனாவுக்குச் சென்றதேயில்லை என்றாலும் கூட, இந்தியாவின் அஹிம்சை இயக்கம் சீனர்கள் பலர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

காந்தி தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் மாகாணத்தில் நடத்திய அமைதிப் போராட்டத்தில் அவருடன் சுமார் 1,000 சீனர்களும் இணைந்தனர் என்கிறார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா.

1906ல் தென் ஆப்ரிக்காவின் ட்ரான்ஸ்வால் மாகாணத்தில் ஆசியர்கள் சொத்து வாங்க விதிக்கப்பட்டிருந்த தடை மற்றும் அவர்கள் அடையாள அட்டையைச் சுமந்து செல்லவேண்டும் என்ற விதி ஆகியவைகளுக்கு எதிராக காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் சீனர்களும் கலந்து கொண்டு காந்தியுடன் கைதாகினர் என்கிறார் குஹா.

சிறையில், சீனர்களுடன், கடவுளை அடைய இருக்கும் பல வழிகளைப் பற்றி காந்தி விவாதித்தார் என்று எழுதுகிறார் குஹா.

படக்குறிப்பு,

காந்தியின் எழுத்துக்கள் மீது புதிய ஆர்வம்

பொருளாதார சீர்திருத்தம், மதம், காந்தி

சீனப் பொருளாதார சீர்திருத்தங்கள் காந்தியின் எழுத்துக்கள் மீது சீனாவில் மீண்டும் ஆர்வத்தைத் தூண்டின என்கிறார் பேராசிரியர் ஷாங்.

1980லிருந்து காந்தி பற்றிய 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சீனாவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

"சீனர்கள் காந்தியை நவீன இந்தியாவின் நிறுவனர் என்றும் அஹிம்சைக் கொள்கையின் விற்பன்னர் என்றுமே அறிந்திருக்கிறார்கள், ஆனால் இப்போது அவர்கள் காந்தியின் மத, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கருத்துக்கள் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவரது எழுத்துக்கள் குறித்து சீனா இப்போது மேலும் ஆர்வம் கொண்டிருக்கிறது", என்கிறார் பாஸ்கல் ஆலன் நாசரேத்.

குறிப்பாக சீனர்கள் , மக்களை அணி திரட்ட காந்தி எவ்வாறு மதத்தைப் பயன்படுத்தினார் என்பது குறித்து வியப்படைந்திருக்கிறார்கள் என்கிறார் பாஸ்கல்.

"சீனாவின் கம்யூனிச சித்தாந்தம் மதத்தை நிராகரிக்கிறது, சீனாவில் இப்போது அறிவுசார் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மட்டங்களில், ஒரு சௌஜன்யமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் மதத்துக்கு இருக்கும் பங்கு குறித்து அறியும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்காக அவர்கள் காந்திய மற்றும் பிற கொள்கைகளை ஆராய்ந்து வருகிறார்கள்", என்கிறார் பாஸ்கல் நாசரேத்.

காந்தியின் போதனைகள் , சீன அரசுக்கும், மக்களுக்கும், அவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் மேம்பட்ட மாற்று வழிகளைப் பரிசீலிக்க உதவலாம் என்று கூறுகிறார், டாக்டர் ஹுவாங்.

அது தவிர, முதலாளித்துவம் மற்றும் நவீனத்துவம் குறித்தும் காந்தி கொண்டிருந்த சந்தேகங்களும் இன்றைய சமகால சீனாவில் பரிசீலிக்கப்படத் தகுந்தவை என்றும் டாக்டர் ஹுவாங் கூறுகிறார்.

'சத்திய சோதனை' உலகின் 35 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதன் 2 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.