அதிமுக-இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கூட்டு

Image caption இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஜெயலலிதா

இன்னும் சில வாரங்களில் இந்திய நாடாளுமன்ற மக்களைவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பாக்கப்படும் சூழலில், அந்தத் தேர்தலில் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் அ இ அ தி மு க, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என இன்று-ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ பி பரதன் இன்று சென்னையில் அ இ அ தி மு க பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து பேசிய பிறகு, இந்த அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார்.

எனினும் தொகுதிப் பங்கீடுகள் மற்றும் இதர விஷயங்கள் குறித்த விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் இந்தக் கூட்டத்துக்கு பிறகு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலில் “அமைதி, வளம், முன்னேற்றம்" என்பதே தமது கூட்டணியின் கொள்கை முழக்கமாக இருக்கும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதனிடையே மற்றொரு இடதுசாரிக் கட்சியான மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் திங்கட்கழமை ஜெயலலிதாவை சந்தித்து பேசவுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரிகள் மற்றும் இதர கட்சிகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.