இந்தியா: 2 -ஜி ஏலத்தில் தொலைபேசி நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன

படத்தின் காப்புரிமை AFP
Image caption இதற்கு முன்னர் 2- ஜி அலைக்கற்றைகளை விற்க அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன

இந்தியாவின் கைத் தொலைபேசி நிறுவனங்கள் நாட்டின் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ( 2-ஜி) உரிமத்துக்கான ஏலத்தில் கலந்துகொண்டுள்ளன.

இந்தியா முழுவதிலும் 2- ஜி உரிமங்களை விற்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள மூன்றாவது முயற்சி இதுவாகும்.

முன்னைய ஏல விற்பனைகளின்போது, ஆரம்ப விலையே மிக அதிகமாக இருப்பதாகக் கூறி நிறுவனங்கள் அவற்றில் பங்கெடுக்கவில்லை.

2012-ம் ஆண்டில் 120க்கும் மேற்பட்ட உரிமங்களை இந்திய உச்சநீதிமன்றம் ரத்துசெய்திருந்தது.

இந்த உரிமங்கள் அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவினால் வழங்கப்பட்டவை.

இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இந்தியாவிலேயே முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெரிய ஊழல் நடந்ததாக ஆ. ராசா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த ஊழல் மூலம் நாட்டுக்கு சுமார் 40 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக அரசாங்க கணக்காய்வாளர்கள் கூறியிருந்தனர்.

இந்த ஊழலக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார்.