மணிப்பூர் பெண்கள் மீது தாக்குதல்: ஒருவர் கைது

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டில்லியில் பெண்கள் மீதும், வடகிழக்கு சிறுபான்மையினர் மீதும் தொடரும் தாக்குதல்கள்

இந்திய தலைநகர் டெல்லியில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 25ஆம் தேதி அன்று டெல்லியில் ஜனநெரிசல் மிகுந்த இடத்தில் ஒரு ஆண் கும்பல் தங்களை தாக்கிப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்த இரண்டு பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் வடகிழக்கை சேர்ந்த ஒரு மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது கவனிக்கதக்கது.

இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து வரும் உள்நாட்டு சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சங்களை வெளிப்படுத்துவதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்த பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதம் செய்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லிவாசியான 32 வயது கோட்லா முபாரக்பூரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பவம் நடந்த அந்த பகுதியில் பொருட்கள் வாங்க சென்ற போது ஒரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின் அந்த நபர் வேறு சிலருடன் சேர்ந்து தங்களை தாக்கியதாக அந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

அந்த சம்பவம் நடைபெற்றபோது அருகில் இருந்த உள்ளுர் மக்களின் இனவாத கருத்துக்களுக்கு தாங்கள் உட்படுத்தப்பட்டதாக அந்த பெண்கள் காவல் துறையிடம் தெரிவித்துள்ளனர்.

21 வயதான வடகிழக்கை சேர்ந்த மாணவர் நிடோ தானியா மரணம் தொடர்பில் 3 கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன் கிழமையன்று அருணாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவரின் தோற்றம் குறித்து ஏளனமாக பேசிய வியாபாரிகள் அவரை தாக்கினர். அடுத்த நாள் அவர் மருத்துவனையில் உயிரிழந்தார்.

நிடோ தானியா அருணாச்சல பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் ஆவார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கானோர் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

பர்மிய மக்களுக்கும் சீன மக்களுக்கும் இனரீதியாக நெருக்கமாக உள்ள இந்தியாவின் வட கிழக்கை சேர்ந்த உள்நாட்டு சிறுபான்மையினர் மக்கள், பெரும்பாலும் தாங்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் இனவெறிக்கும் பாரபட்சங்களுக்கும் உள்ளாகுவதாக கூறுகின்றனர்.