பொற்கோவில் தாக்குதலில் பிரிட்டன் ஆலோசனை

Image caption பிந்த்ரன்வாலே(நடுவில்) தலைமையிலான தீவிரவாதிகளை வெளியேற்ற தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பொற்கோவில் மீது 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலுக்கு தாங்கள் ஆலோசனை வழங்கியதை பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளது.

எனினும் அந்தப் பங்கு என்பது நடவடிக்கை இடம்பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆலோசனை வடிவத்திலேயே இருந்தது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள சீக்கியர்களின் மிகவும் புனிதத் தலமான பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகளை உயிரிடுடன் பிடிக்கவோ அல்லது உடலாக மீட்கவோ இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு முன்னெடுத்த நடவடிக்கையில் பிரிட்டனுக்கும் பங்கிருந்தது என்ற தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த்து.

இதையடுத்து பிரிட்டன் ஒரு விசாரணையை நடத்தியது. அதில் ஆலோசனை எனும் மட்டத்திலேயே, இந்திய அரசின் வேண்டுகோளின் பேரில் உதவிகள் வழங்கப்பட்டன என்று தெரியவந்துள்ளது.

Image caption சீக்கியர்களின் மிகவும் புனிதத் தலமாக பொற்கோவில் கருதப்படுகிறது.

பொற்கோவில் மீதான இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்ற அந்த ஆலோசகர், தாக்குதல் நடவடிக்கை என்பது கடைசி நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என்றும், அதுவும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் என வில்லியம் ஹேக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் பிரிட்டன் அந்த நடவடிக்கைக்கு எந்த உபகரணங்களோ அல்லது பயிற்சியோ வழங்கவில்லை என்றும் வில்லியம் ஹேக் கூறியுள்ளார். பிரிட்டன் ஆலோசனை வழங்கி மூன்று மாதங்களுக்கு பிறகு இடம்பெற்ற அந்தத் தாக்குதல் நடவடிக்கை, தமது ஆலோசனையிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்தது என்றும் வில்லியம் ஹேக் கூறுகிறார்.

ஆனால் ஆபரேஷன் ப்ளூஸ்டார் நவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் தனக்கு எந்த ஆலோசனையும் கிடைக்கப்பெறவில்லை என்று பிபிசியிடம் கூறினார்.

பிரிவினைவாத சீக்கியத் தீவிரவாதிகளைக் களையெடுப்பதற்காக இந்தியப் பாதுகாப்புப் படைகளால் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.