மூன்றாவது அணி தலைவர் யார்? தேர்தலுக்குப் பின்னர் முடிவு-- வரதராஜன்

படத்தின் காப்புரிமை AP
Image caption பொதுத்தேர்தல் கூட்டணி நகர்வுகள்

இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சிக்கு மாற்றாக, மூன்றாவது அணி ஒன்றினை அமைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இன்று , அந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் கூட்டம் ஒன்று டில்லியில் நாடாளுமன்றத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், இடது சாரிக்கட்சிகளான, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவையும், சமாஜ்வாடி ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், அதிமுக, அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகளும் கலந்துகொண்டதாக செய்திகள் கூறுகின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தக் கூட்டம் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கே.வரதராஜன் ,காங்கிரஸ் கட்சி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சியும் இதே பொருளாதார சிந்தனையைக் கொண்டிருக்கிறது என்றார்.

மேலும், பாஜக மதவாத சிந்தனைகளை வைத்திருப்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது , எனவே இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியொன்றை அமைத்து இரு கட்சிகளையும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கலந்துகொண்ட கட்சிகளிடையே இருந்தது என்றார் வரதராஜன்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று கூறிய வரதராஜன், இது குறித்து தேர்தலுக்குப் பின்னர் முடிவு செய்யலாம் என்ற எண்ணமே கட்சிகளிடையே இருக்கிறது என்றார்.

இந்திய அரசியலில் மூன்றாவது அணிக்கு இடமில்லை, மூன்றாவது அணி மூன்றாந்தர நிலைக்கு நாட்டை எடுத்துச் செல்லும் என்று குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவருமான நரேந்திர மோடி கூறியிருப்பதைப் பற்றிக் கேட்டபோது, நரேந்திர மோடி எப்போதுமே நாகரீகமான முறையில் பேசக்கூடியவர் அல்ல. இது குறித்து தாங்கள் பெரிதாகக் கவலைப்படவில்லை என்றார்.

மூன்றாவது அணி இந்திய அரசியலில் பெரிய அளவு வெற்றி பெற்றதேயில்லை என்ற நிலையில், இந்தத் தேர்தலில் மட்டும் அது எப்படி பரிமளிக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தேசியக் கட்சிகள் எவையும், நாடு முழுவதும் செல்வாக்கு பெற்றிராத நிலையில், பிராந்தியக் கட்சிகளே அந்தந்த மாநிலங்களில் வலுவாக இருக்கின்றன. எனவே பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியாக அமைந்துள்ள மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார் வரதராஜன்.