அரிசி மீது சேவை வரி: திமுக தலைவர் கண்டனம்

திமுக தலைவர் கருணாநிதி
Image caption திமுக தலைவர் கருணாநிதி

இந்திய அரசாங்கம் கோதுமைக்கு விலக்கு அளித்துவிட்டு அரிசி மீது சேவை வரி விதித்திருப்பதை திமுக தலைவர் கருணாநிதி கண்டித்துள்ளார்.

அரிசி மீது சேவை வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் தமிழ்நாட்டை ஆளும் அதிமுக வாய்திறக்காமல் இருப்பதாகவும் கூறி அவர் விமர்சித்துள்ளார்.

மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத பல அறிவிப்புகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் விளைபொருள் என்று வரையறுத்து சேவை வரியிலிருந்து கோதுமைக்கு விலக்கு அளித்துள்ள மத்திய அரசு அரிசிக்கு அவ்வாறு விலக்கு அளிக்காதது, வட இந்தியர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் இடையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பதையே குறிப்பதாக அவர் சாடியுள்ளார்.

12.36 சதவீதம் சேவை வரி விதிப்பதன் மூலமாக தென்னிந்தியர்களின் ஆதார உணவான அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

நெல் என்பது வேளாண் விளைபொருள் அதுவே தோல் நீக்கி அரிசியாகும்போது அது வேளாண் விளைபொருள் ஆகாது எனவே அதற்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

அரிசி மீது சேவை வரி விதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்திய அரசு அரிசிக்கு விதித்திருக்கும் புதிய சேவைவரியால் அரசிவிலை உயருமென்றும், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுமென்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கே எஸ் ஜெகதீசன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தச் செய்தி குறித்து மேலும்