ஒரிசாவில் மஹாநதியில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 13 பேர் பலி

  • 10 பிப்ரவரி 2014
படத்தின் காப்புரிமை BBC World Service

இந்தியாவின் கிழக்கிலுள்ள ஒரிசா மாநிலத்தில் மஹாநதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 13 பேர் வரை ஆற்றில் மூழ்கியதாகவும், 7 பேரைக் காணவில்லை என்றும் அம்மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று சம்பால்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அணையின் அருகே இந்த படகு கவிழ்ந்த நேரத்தில் அதில் 100க்கும் அதிகமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

மூழ்கியவர்கள், அந்த படகை வாடைக்கு எடுத்து பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.

இந்தியாவில் படகுகள் அளவிற்கு மீறி சுமை தாங்கி செல்வதாலும், பாதுகாப்பு தரத்தை கடைப்பிடிக்காத்தாலும், படகுகள் விபத்துளை சந்திப்பது சகஜமானதாகும்.

இதுவரை 13 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

காவல்துறையினரும் அவசர சேவை பணியாளர்களும் டஜன் கணக்கானோரை மீட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகின் மேலோடில் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் 6 அல்லது 7 பேரை மீட்கும் முயற்சியில் இரவு முழுவதும் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஹிராகுத் அணையிலிருந்து அளவிற்கு அதிகமான சுமையை ஏந்தி திரும்பி கொண்டிருந்த இந்த படகு கவிழ்ந்ததாக, உள்ளூர் காவல் துறை அதிகாரி அமிதாப் பாண்டே பிபிசியிடம் தெரிவித்தார்.

"படகு திடீரென்று ஆடத் துவங்கியது, பின் தண்ணீர் வேகத்துடன் பாய்ந்து படகிற்குள் வரத்துவங்கியது. அந்த தண்ணீரை வெளியே அனுப்ப நாங்கள் எங்களால் முடிந்த வரை பாடுபட்டோம். ஆனால் அந்த முயற்சி போதவில்லை", என்று படகிலிருந்து பிழைத்த ஒருவர் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் வங்காள விரிகுடாவில் அந்தமான் நிகோபர் தீவுகளில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 21 பேர் வரை இறந்திருந்தனர்.

மேலும் கடந்த ஜூலை மாதம் பிஹார் மாநிலத்தில் கோசி நதியில் ஒரு படகு கவிழ்ந்ததில் 11 பேர் மூழ்கினர். அதில் 24 பேர் கரைக்கு நீந்தி உயிர்தப்பியிருந்தனர்.