நளினிக்கு பரோல் தருவதற்கு சிறை கண்காணிப்பாளர் எதிர்ப்பு

நளினி முருகன் கைதானபோது (ஆவணப்படம்) படத்தின் காப்புரிமை AP
Image caption நளினி முருகன் கைதானபோது (ஆவணப்படம்)

முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி பரோலில் விடுதலை செய்யப்படக்கூடாது என அச் சிறையின் கண்காணிப்பாளர் கருப்பண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினி தற்போது நெல்லை மாவட்டம் அம்பலவாணபுரத்தில் வசித்து வரும், 92 வயதான தனது தந்தை சங்கரநாராயணன் உடல் நலம் மிகக்குன்றி மரணப்படுக்கையில் இருக்கிறார், அவருடைய இறுதிக்காலத்தில் அவருடன் இருக்கவிரும்புகிறேன், எனவே ஒரு மாதம் விடுப்பு அளிக்குமாறு வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு உத்திரவிடவேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ஆனால் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணனோ தன்னுடைய பதில் மனுவில் நளினியின் தந்தை ஆரோக்கியமாகவே இருப்பதாகவும் அவரை கவனித்துக்கொள்ள மனைவியும் மகனும் உடனிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தவிரவும் அம்பலவாணபுரம் மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கின்றது. அந்த அளவில் கைதி ஒருவரை அங்கே நீண்ட நாட்கள் தங்கவிடுவது விரும்பத் தக்கதல்ல.

நாடாளுமன்றத்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை சந்திக்க முற்படலாம், அதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் உருவாகலாம்.

வேலூர் சிறையின் நன்னடத்தை அதிகாரியும் கடந்த காலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் இறங்கியிருக்கும் நளினி பரோலில் செல்லத் தகுதியானவர் இல்லை எனக் கூறியிருக்கிறார். எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படவேண்டுமென கருப்பண்னன் வாதிட்டிருக்கிறார்.

நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று செவ்வாய்க்கிழ்மை வழக்கு விசாரணையை எதிர்வரும் பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.