டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் படத்தின் காப்புரிமை Reuters
Image caption அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனதை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற டெல்லி துணை நிலை ஆளுநரின் அறிவுரையை மீறி, டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை முதல்வர் தாக்கல் செய்ய முற்பட்டார்.

இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளிக்கிடையே மசோதாவை டெல்லி முதலைச்சர் தாக்கல் செய்தார். எனினும் தொடர்ந்து அமளி நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டபேரவை மீண்டும் கூடிய உடன் மசோதாவை தாக்கல் செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கோரியதை அடுத்து எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

மீதம் 42 உறுப்பினர்கள் இந்த மசோதாவை தாக்கல் செய்ய கூடாது என்று வாக்களித்திருந்தனர்.

42 உறுப்பினர்கள் எதிர்ப்பதால், ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று டெல்லி சட்டபேரவைத் தலைவர் எம்.எஸ். திர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி ஆட்சியின் ஊழல் தடுப்புக்கான ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதால் டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகியிருப்பது அவருக்கு அரசியலில் லாபமே என்கிறார் பிடிஐ செய்தி நிறுவன ஆசிரியர் சந்திரசேகரன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜன் லோக்பால் மசோதா விவகாரத்தில் எத்தகைய எல்லைக்கும் செல்லத் தயார் என்று முன்னதாக கூறியிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் தான் பதவியை ராஜினாமா செய்வதாக முன்னரே அறிவித்திருந்தார்.

ஜன் லோக்பால் மசோதாவின் கீழ் முதல்வர் பதவியை வகிப்பவர் முதல், நான்காம் பிரிவு அரசு ஊழியர்கள் வரை எவரேனும் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 தேதியிலிருந்து டெல்லி முதல்வர் பதவி வகித்து வரும் அர்விந்த கெஜ்ரிவால், 49 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது டில்லி வாக்க்களர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களை தோற்றுவித்திருப்பது அவர்கள் சிலர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கும் கருத்துக்களில் வெளிப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை