இந்தியப் பிரதமரை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மனைவி பிரேமலதாவுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
Image caption மனைவி பிரேமலதாவுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளார்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் அவரது இல்லத்தில், தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சில தலைவர்களுடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சந்தித்தார்.

அப்போது தமிழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் தாது மணல் கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்ததாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை, அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு பிரச்னைகள் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஒன்பது விவகாரங்களில் தீர்வு பெற, தேவையான அனைத்து நடவடிக்கைகளையையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தான் கோரியதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் இது சம்பந்தமாக வெறுமனே கடிதங்கள் எழுதுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தினார்.

தங்களது சொந்த விவகாரங்களுக்காக மட்டுமே அதிமுக மற்றும் திமுக தலைமை டில்லிக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்த அவர், ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்து பேச பிரதமரை நேரடியாக சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான தன்னால் கூட சந்திக்க முடியாது எனவும், இந்நிலையில் சாதாரண பொதுமக்கள் தங்கள் பிரச்சனையை எவ்வாறு அவரிடம் தெரிவிக்க முடியும் எனவும் புகார் கூறினார்.

திமுக, காங்கிரஸ் மற்றும் தேமுதிக கூட்டணி உருவாகும் அறிகுறிகள் எதுவும் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது குறித்தும், எதிர்வரும் மக்களவை தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எனவும் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த விஜயகாந்த், கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையை நிகழ்த்த தான் டில்லிக்கு வரவில்லை என்றார்.

இதனையடுத்து கூட்டணி குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என கூறிய அவரிடம், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, செய்தியாளர்கள் பாரபட்சமாக கேள்விகளை எழுப்புவதை தன்னால் சகித்து கொள்ள முடியவில்லை என அவர் கூறியதோடு, இது போன்ற கேள்விகளுக்கு தான் பதிலளிக்க தேவையில்லை என்று செய்தியாளர்களிடம் அவர் கோபம் காட்டியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.