இந்திய பட்ஜெட் தாக்கல், வரிச் சட்டங்களில் நேரடி மாற்றம் இல்லை

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் படத்தின் காப்புரிமை EPA
Image caption மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கு இடையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளியன்று 2014-15 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதை தாக்கல் செய்யும் பொழுது பேசிய மத்திய நிதியமைச்சர், உலகின் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும், கடந்த சில ஆண்டுகளாக சவாலாக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை தற்போது கட்டுப்பாட்டில் வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

  • புதிய பட்ஜெட்டில் அரிசியை சேமித்தல், கையாளுதல் போன்ற சேவைகளுக்கான சேவை வரி ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.
  • முன்னதாக, அரசி மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்தும் வலியுறுத்திவந்தது என்பது குறிப்பிட்தக்கது.
  • இந்தியாவில் சிறிய வகை கார்கள் மீதான உற்பத்தி வரி 12 சதவிகிதத்திலிருந்து இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் வரிச் சட்டங்களில் மாற்றம் இல்லை என்றாலும் மறைமுக வரிகளில் மாற்றம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வே துறைக்கான உறுதுணைத் தொகை ஒதுக்கீடு ரூ.29,000 கோடி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உணவு மானியத்துக்கு ரூ.1,16,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் ஓய்வூதியம்

குறிப்பிடத்தக்க ஒரு திட்டமாக 2015-லிருந்து ராணுவத் துறையினருக்கு 'ஒன் ரேங்க் - ஒன் பென்ஷன்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல லட்சக்கணக்கான எண்ணிக்கையிலுள்ள ஓய்வு பெரும் இராணுவ துறையினருக்கு பயனளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த வாரம், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 'ஒன் ரேங்க் - ஒன் பென்ஷன்' கோரிக்கைக்கு ஆதரவு அளித்து, அந்த திட்டம் அமலுக்கு வர அனைத்து முயற்சிகளையும் செய்வதாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்தாண்டு காலத்தில் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் இந்திய அரரசாங்கம் பெருமிதம் கொள்ளும் சமூக பொருளாதார இலக்குகளின் நிறைவேற்றம் குறித்தும் நிதியமைச்சர் யதார்த்தமாக பட்டியிலிட்டுள்ளார் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேலை இந்த பட்ஜெட் இந்த அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் என்றும், தற்போதைய அரசாங்கம் இதில் குறிப்பிடவாறு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்றும் எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.