தேஜ்பால் மீது பாலியல் வன்புணர்ச்சி குற்றப் பத்திரிகை தாக்கல்

தருண் தேஜ்பால் படத்தின் காப்புரிமை AFP
Image caption கடந்த சில மாதங்களாக தேஜ்பால் தடுப்புக்காவலில் இருந்துவருகிறார்.

இந்தியாவில் முன்னணி புலனாய்வு பத்திரிகையான தெஹெல்காவின் ஆசிரியர் தருண் தேஜ்பால் உடன் வேலைபார்த்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்ச்சி செய்தார் என்றும், அப்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் என்றும் கோவா பொலிசார் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் தேஜ்பால் இக்குற்றச்சாட்டுகளுக்காக தடுப்புக்காவலில் இருந்துவருகிறார்; அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டிருந்தது.

மாநாடு ஒன்று நடந்த நேரத்தில் தேஜ்பால் தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக உடன் வேலைபார்த்த இளம் பெண் ஒருவர் குற்றம்சாட்டதை அடுத்து கைதுசெய்யப்படாமல் தப்பிக்க தேஜ்பால் முயன்றிருந்தார் என பொலிசார் கூறுகின்றனர்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை தேஜ்பால் மறுக்கிறார்.

அதிகார உயர்மட்டத்திலும் அரசியல் உயர்மட்டத்திலும் நடக்கக்கூடிய ஊழல்களை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டி பெயர் பெற்ற நாட்டின் முன்னணி பத்திரிகையாளர்களில் ஒருவர் தேஜ்பால்.

அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்திருந்தது.