ராஜீவ் கொலை: தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் தடை

இந்திய உச்சநீதிமன்றம் படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழு பேரில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத்தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த மூவரின் விடுதலையை எதிர்த்து இந்திய நடுவணரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த மூவரின் விடுதலைக்கு இன்று தடை விதித்திருக்கின்றனர்.

நான்குபேர் விடுதலை தொடர்பில் குழப்பம்

அதேசமயம், ராஜீவ் கொலை வழக்கில் ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் குறிப்பிட்ட எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று தமிழக அரசின் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி தெரிவித்தார்.

அப்படியானால் அந்த நால்வரையும் தமிழக அரசு முன்பு திட்டமிட்டபடி விடுவிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தம்மால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்தார் தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி.

தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் நடவக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தூக்கு தண்டனையை குறைத்தல் என்ற தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனு நிலுவையில் உள்ள நிலையில், சிறையில் இருந்து குற்றவாளிகள் விடுவிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு தனது மனுவில் கோரியிருந்தது.

இன்றைய விசாரணையின்போது ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில், அதற்குரிய சட்டநடைமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவரை விடுவிக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கும் ஆட்சேபணைகள் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.