அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது

தமிழக முதல்வர் ஜெயலலிதா
Image caption தமிழக முதல்வர் ஜெயலலிதா

நடைபெறவுள்ள இந்திய மக்களவைத் தேர்தலுக்கான தனது முழுமையான தேர்தல் அறிக்கையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 40 மக்களவை தொகுதிகளுக்கான கட்சியின் வேட்பாளர்களை திங்களன்று அது அறிவித்திருந்தது.

நடைபெறவுள்ளது மக்களவை தேர்தல் என்பதால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் மற்றும் தமிழக மக்களின் கவனத்தை கவரும் அம்சங்கள் ஆகியவற்றை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினரான டி.ராஜா கருத்து கூறியுள்ளார்.

செவ்வாயன்று வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், இந்திய வாக்காளர்களை கவரும் விதாமாக வரி விலக்கு மற்றும் ஐந்து ஆண்டுகளில் 10 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உட்பட 43 முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

 • அவற்றில் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது,
 • தனி ஈழம் தொடர்பாக மக்களின் கருத்தை அறிந்துக் கொள்ள வாக்கெடுப்பு நடத்துவது,
 • தமிழக மீனவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பது,
 • கச்சதீவை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது,
 • தமிழை அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக்குவது,
 • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை,
 • பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுபடுத்துவது,
 • இந்திய ஆட்சி முறையில் மாநில அரசும், மத்திய அரசும் இருவர்க்கொருவரை கட்டுப்படுத்தாத உரிய அதிகாரங்களுடன் இணைந்து செயல்படுவது,
 • மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன், பெண்களின் பாதுக்காப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு தேவையான நலத்திட்டங்கள்,
 • ஊழலை அறவே அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள்,
 • வெளிநாட்டு தொடர்பிலான கொள்கைகளில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்

உள்ளிட்ட தேசிய மற்றும் மாநிலம் தொடர்பிலான பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் மட்டுமின்றி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான திட்டங்கள், வாக்குறுதிகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாகக் கூறினார்.

அதோடு இந்த அறிக்கை தொடர்பிலான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தாம் பின்னர் பதிலளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.