கருணைக் கொலை: அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு பரிந்துரை

இந்திய உச்சநீதிமன்றம் படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவில் கருணைக்கொலைக்கு அனுமதி கோரும் மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்து உச்சநீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

கருணைக் கொலை தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு தொடர்பிலான சட்டமுறைகள் தெளிவாக உருவாக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பிலான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பின் இது தொடர்பிலான வழிமுறைகளை வகுக்கும் ஒரு இறுதி முடிவை இந்த அரசியல் சாசன அமர்வு எடுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

நோயால் அவதிப்படும் ஒரு நபர் செயற்கை மருத்துவ உதவியுடன் மட்டுமே ஆயுள் முழுவதும் வாழ்வதை தடுத்த நிறுத்த கோரி ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் இந்த மனு தொடுக்கப்பட்டது.

கருணைக்கொலை என்பது தற்கொலைக்கு நிகரானது என்று இதனை எதிர்த்துவரும் மத்திய அரசு, இந்த கருணை கொலைகளை இந்திய தேசத்தில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தது.

இந்த மனுவை எதிர்த்து முன்னதாக வாதிட்ட கூடுதல் சோலிசிடர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, கருணைக் கொலைகளை அனுமதிப்பது மருத்துவ கோட்பாடுகளுக்கு எதிரானது என வாதிட்டிருந்தார்.

அதேசமயம், மருத்துவ உதவி இல்லாமல் இனி வாழ முடியாது என்ற நிலையில் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ஒரு நபருக்கு சிகிச்சை அளிப்பது கொடுமையானது என தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதாடினார்.

மேலும் அத்தகைய சிகிச்சையில் செயற்கை உபகரணங்கள் மூலம் அவர்கள் சுவாசிப்பதும், உணவு உட்கொள்வதும் அதிக துன்பம் அளிப்பதாகும் எனவும் அவர் கூறியிருந்தார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு, 'காமன் காஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த இந்த பொதுநல வழக்கு விசாரணையின் தொடர்பில் மத்திய சுகாதார மற்றும் சட்டம் அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பின் அந்த அமைச்சகத்தின் பதில்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி இதற்கு முன்னர் கருணைக் கொலை மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பும் அரசியல் சாசன அமர்வால் மறுபரிசீலனை செய்யப்படும்.