மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

மூன்றாவது அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவையும் இடம்பெறுகின்றன. படத்தின் காப்புரிமை AFP
Image caption மூன்றாவது அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவையும் இடம்பெறுகின்றன.

இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாமல் இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளை கொண்ட மூன்றாவது அணி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருப்பதை போன்ற மாயையை அவர்கள் உருவாக்கியுள்ளதாக குற்றம் கூறியுள்ள, இந்த 11 கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் செவ்வாயன்று புதுடில்லியில் நடைபெற்றது.

முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் கரத், புதியதாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அணியில் இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தள், மதசார்பற்ற ஜனதா தள், பிஜு ஜனதா தள், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அசோம் கானா பரிஷத் போன்ற 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

"மக்களின் நம்பிக்கைக்குரிய அணி"

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத மூன்றாவது கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளதாக கூறிய பிரகாஷ் கரத், இந்த மூன்றாவது அணி மக்களின் நம்பிக்கைக்குரிய அணியாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அசோம் கானா பரிஷத் கட்சியின் தலைவர் பிரப்புல்லா குமார் மகந்தா மற்றும் பிஜு ஜனதா தள் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, 11 கட்சிகளை கொண்டு உருவாகியுள்ள இந்த மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

மதசார்பற்ற மற்றும் ஊழலை எதிர்க்கும் சிந்தனையோடு உருவாகியுள்ள இந்த கூட்டணியில், ஒத்த கருத்துகளை உடைய மற்ற கட்சிகளும் இணைத்து முறையான ஜனநாயக ஆட்சியை உருவாக்க ஒன்றுபட வேண்டும் எனவும் கோரினார்.

பிரதமர் வேட்பாளர் யார்?

ஏற்கனவே பிஜேபி தனது பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்துள்ளது, அதுபோல காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் ராகுல் காந்தியை முன்வைத்து தேர்தல் பிரச்சாரங்களை செய்து வரும் சூழலில், இந்த மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் பிரகாஷ் கரத்திடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எதுவும் அறிவிக்கப்படமாட்டது என்றார்.

தேர்தல் முடிவுக்கு பிறகே பிரதமர் குறித்த முடிவுகள் எட்டப்படும் எனவும் கூறினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட இந்த மூன்றாவது அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சில தலைவர்களும், தங்களது பிரதமர் கபவை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இந்த மூன்றாவது அணியில் இணைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.