நெல்லூர் கடலோரத்தில் 800 கடல் ஆமைகள் கரையொதுங்கின

இறந்துக் கரையொதுங்கிய கடல் ஆமைகள் கணக்கெடுக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.
Image caption இறந்துக் கரையொதுங்கிய கடல் ஆமைகள் கணக்கெடுக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டக் கடலோரப் பகுதியில் ஒரு சில நாட்கள் முன்பாக எண்ணூறுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் செத்துக் கரையொதுங்கியுள்ளன.

தமிழில் சிற்றாமைகள் என்று சொல்லப்படும் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் இந்தியக் கடலோரப் பகுதியில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதென்பது கடந்த பத்து ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

கடல் ஆமைகள் உயிரிழந்த பெண்ணாறு முகத்துவாரத்தில் அந்நேரம் தமிழகத்தைச் சேர்ந்த பல இழுவை மீன்பிடிப் படகுகள் இரால் பிடிப்பதற்காக கரைக்கு மூன்றரை கிலோமீட்டர் தூரம் வரை வந்திருந்தன என்று இந்த சம்பவம் பற்றி விசாரணைகளை நடத்தியுள்ள கடலாமைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் ட்ரீ ஃபவுண்டேஷன் கூறுகிறது.

கடல் ஆமைகள் சுவாசிப்பதற்காக முக்கால் மணி நேரத்துக்கு ஒரு முறை நீரின் மேல்மட்டத்துக்கு வர வேண்டும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சாதாரணமாக இழுவை மீன்பிடி வலைகள் நான்கைந்து மணிநேரம் வரை தொடர்ந்து இழுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

அவ்வாறான வலைகளில் சிக்கிக்கொள்ளும் கடல் ஆமைகள் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடுகின்றன.

தற்போது நடந்துள்ள சம்பவத்திலும் கடல் ஆமைகள் இழுவை வலைகளில் சிக்கி இறந்துள்ளதாகவே விசாரணைகளில் தெரிவதாக ட்ரீ ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சுப்ரஜா தாரினி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

ஒடிஷா மாநில கரையோரப் பகுதி ஒன்றில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக இந்த வகை கடல் ஆமைகள் பெரும் எண்ணிக்கையில் வந்து சேர்கின்றன.

அவ்வாறு வந்துவிட்டுப் போகும் வழியில்தான் இந்தக் கடல் ஆமைகள் நெல்லூர் மாவட்டத்தை ஒட்டிய கடலோர பகுதியில் உயிரிழக்க நேர்ந்துள்ளது.

கடலோரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர்கள் தாண்டியே இழுவை வலைகளைப் பயன்படுத்த வேண்டும் என ஆந்திர மீன்பிடி விதிகள் கூறினாலும், அப்படியான விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்று சுப்ரஜா தாரினி தெரிவித்தார்.

ஆமைகள் சிக்காமல் வெளியேறுவதற்குரிய கருவிகள் இழுவை வலைகளில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற விதியும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

மீனவர்கள் மத்தியில் விதிகளைக் கடைப்பிடிக்கும் மனப்பாங்கும், விழிப்புணர்வும், சுற்றாடலைப் பேண வேண்டும் என்ற அக்கறையும் வளர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.