சக சிப்பாய்கள் 5 பேரை சுட்டுக்கொன்று இந்திய சிப்பாய் தற்கொலை

படத்தின் காப்புரிமை PTI
Image caption சர்ச்சைக்குரிய காஷ்மீரில் சிரமமான நிலைமைகளில் இந்திய சிப்பாய்கள் ( ஆவணப்படம்)

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், இந்திய சிப்பாய் ஒருவர் சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து படையினர் பலியானார்கள்.

தலைநகர் ஸ்ரீநகருக்கு சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு ராணுவ முகாமில் புதன் கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்ட சிப்பாயும் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவம் தெரிவிக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஒன்றுக்கு ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் காஷ்மீர் பகுதி, இந்திய மற்றும் பாகிஸ்தான் பகுதிகளாகப் பிளவுண்டு கிடக்கிறது. இரு நாடுகளும் தத்தம் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரப் பகுதியின் எல்லையில் துருப்புகளை நிலை நிறுத்தியிருப்பதால், அங்கு ஒரு பதற்ற நிலை நிலவுகிறது.

இந்திய சிப்பாய்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றும், மோசமான பணி நிலைமைகள் நிலவுவதாகவும், விடுப்பில் செல்ல எளிதாக அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அடிக்கடி கூறுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.