கொலையாளியை அடையாளம் காட்டிய கிளி

படத்தின் காப்புரிமை AFP
Image caption கொலையாளி பற்றித் துப்புத் தந்த செல்லக்கிளி ( ஆவணப்படம்)

வட இந்திய நகரமான ஆக்ராவில் ஒரு செல்லக்கிளி தனது உரிமையாளரின் கொலையாளியை கண்டறிவதற்கு உள்ளூர் காவல் துறைக்கு உதவியதாக பாராட்டப்பட்டுள்ளது.

தன்னை செல்லப் பறவையாக வளர்த்த பெண் கொலை செய்யப்பட்ட பின், அவரது உறவினர் மகன் அந்த வீட்டிற்குள் வந்தாலோ அந்த உறவினரின் மகனின் பெயர் அழைக்கப்பட்டாலோ அந்த ‘ஹீரா’ அதாவது வைரம் என்று பெயரிடப்பட்டுள்ள கிளி உரக்கக் குரலெழுப்பி, ஆர்ப்பாட்டம் செய்யத் துவங்கியதை அடுத்து அந்த உரிமையாளரின் உறவுக்காரர்கள் சந்தேகமடைந்தனர்.

கிளியிடம் அந்த குடும்பத்தினர் வேறு பலரின் பெயர்களை சொல்லிப் பார்த்தனர். அந்த சந்தேக நபரின் பெயரை தவிர மற்ற எல்லாப் பெயர்களைச் சொன்னபோதெல்லாம், அந்தக் கிளி அமைதியாகவே இருந்தது.

பெப்ரவரி 25ஆம் தேதி, அந்த சந்தேக நபரும் அவருடன் உடந்தையாக இருந்தவரும் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் கூறினர்.

அவர்களுடன் சேர்த்து கொலை ஆயுதமான ஒரு குத்துவாளும், இறந்த பெண்ணின் காணாமல் போன நகைகளும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணை குத்திக் கொன்றதாக அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.