சஹாரா குழுமத் தலைவர் போலிசில் சரண்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சுப்ரதா ராய் போலிசில் சரண்

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் காவல் துறையினரிடம் இன்று காலை சரணடைந்துள்ளார்.

சரணடைந்த சுப்ரதா ராய் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவுள்ளதாகவும், நீதிமன்றத்தில் அடுத்த கட்ட விசாரணைகளில் ஆஜர் ஆவார் என்றும் அவரது மகன் சீமாந்தா ராய் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பித் தராத வழக்கு தொடர்பில் நடந்து வரும் விசாரணையின் போது பெப்ரவரி 26ஆம் தேதி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத சுப்ரதா ராய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் துறை அவருடைய லக்னோ இல்லதிற்கு சென்றது. ஆனால் அவர் அவரது இல்லத்தில் இல்லாத காரணத்தினால் அவரை கைது செய்ய முடியவில்லை.

"தந்தை குற்றமற்றவர்"

இது தொடர்பில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சஹாரா குழுமம் தலைவர் சுப்ரதா ராயின் மகன் சீமாந்தா ராய் தனது தந்தை குற்றமற்றவர் என்றும், இந்த தேசத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் மதிப்பவர் என்றும் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றம் அளித்துள்ள ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை திரும்பி பெற கோரி தங்களின் வழக்கறிஞர்கள் இன்று மனு தாக்கல் செய்துள்ளதாகவும் சீமாந்தா ராய் தெரிவித்தார். அத்துடன் தானாகவே முன்வந்து தனது தந்தை சரணடைந்த காரணத்தினாலும், தனது தந்தையின் தாயார் உடல் நலக் குறைவாக இருந்ததால் தனது தந்தையால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 26ஆம் தேதி அன்று ஆஜர் ஆக முடியாமல் போன காரணத்தினாலும் தாங்கள் இந்த மனு தாக்கல் செய்வதாக சீமாந்தா ராய் தெரிவித்தார்.

இன்று அந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க அந்த சிறப்பு அமர்வை உடனடியாகக் கூட்ட முடியாது என்ற காரணத்தினால் அந்த அவசர மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

"ஊடகங்கள் தவறாக சித்தரிக்கின்றன"

மேலும் சுப்ரதா ராய் கையெழுத்திட்டு அவர் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் தலைமறைவாகவில்லை என்றும், செய்தி ஊடகங்கள் தன்னை தவறாக சித்தரிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். காவல் துறை தன் லக்னோ இல்லத்திற்கு வந்தபோது தான் தனது தாயார் உடல் நலம் தொடர்பில் சில மருத்துவர்களை சந்திக்க சென்றிருந்ததாகவும், பின் இரவு வீடு திரும்பியவுடன் தனது குடும்பம் இந்த தகவலை அளித்தவுடன் மறு நாள் காலையே தான் சரணடைந்துவிட்டேன் எனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

சஹாரா நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக திரட்டிய ரூ.20 ஆயிரம் கோடியை நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பித் தராத சஹாரா குழுமத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போது நடைபெற்றுவருகிறது. இதன்மீது கடந்த 20-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, முதலீட் டாளர்களுக்கு நிதியை திருப்பித்தராததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிட்டதக்கது.

இது தொடர்பில் பெப்ரவரி 26ஆம் தேதி அன்று நடைபெற்ற விசாரணையின் போது நீதிமன்றத்தில் சுப்ரதா ராய் ஆஜர் ஆக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அவர் ஆஜராக வில்லை. இந்த வழக்கு தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணை மார்ச் மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.