தமிழக விசைப்படகு மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குச் சென்றனர்

தமிழக விசைப்படகு மீனவர்கள் தொழிலை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். படத்தின் காப்புரிமை AFP
Image caption தமிழக விசைப்படகு மீனவர்கள் தொழிலை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துக்காக பிப்ரவரி 13ஆம் தேதி வரை மார்ச் 13ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்துக்கு மீன்பிடித் தொழிலை நிறுத்திவைத்திருந்த தமிழக விசைப்படகு உரிமையாளர்கள், தற்போது மீண்டும் கடலுக்குச் சென்றுள்ளனர்.

சென்னையில் கடந்த ஜனவரி 27ஆம் தேதி இருநாட்டு மீனவர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் முடிவில், விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதை ஒரு மாத காலம் நிறுத்திவைக்கின்ற முடிவு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இரண்டு வார காலத்துக்கு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தனர்.

ஆனால் மீன்பிடித்துறையின் அனுமதிகளைப் பெற்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமையன்று மீண்டும் கடலுக்கு சென்றுள்ளனர்.

ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால் போன்ற கடலோர மாவட்டங்களிலும் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்கத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

மீனவர்களால் தொழிலுக்கு செல்லாமல் ஜீவனம் நடத்த முடியவில்லை என்பதுதான், ஏற்றுக்கொண்ட காலத்துக்கு முன்பாகவே தாங்கள் மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளதன் காரணம் என தமிழோசையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

விசைப்படகு மீன்பிடியை ஒரு மாத காலம் நிறுத்திவைக்கின்ற முடிவை இலங்கை தரப்பு கேட்காமல் தாங்களாகவேதான் அறிவித்திருந்ததாகவும், ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி மீன்பிடிக்கத் துவங்கியுள்ளதாகவும், இதனால் எதிர்கால பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படாது என்று தாங்கள் நம்புவதாகவும் போஸ் தெரிவித்தார்.

இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக பொலிசார் வழக்கு

இதனிடையே, தமிழக மீனவர்கள் சிலரின் மீன்பிடி வலைகளை அறுத்து போட்டு சேதம் விளைவித்ததாகவும், வலையை திருடிச் சென்றதாகவும் இலங்கை மீனவர்கள் மீதும், கப்பலைக் கொண்டுவந்து மீனவப் படகில் மோதி சேதம் விளைவித்ததாக இலங்கை கடற்படையினர் மீது இந்திய குற்றவியல் சட்டங்களின் கீழ் தமிழக பொலிசார் ராமேஸ்வரத்தில் வழக்கு பதிவுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையினர் மீதும் மீனவர்கள் மீதும் இவ்விதமாக வழக்கு பதிவுசெய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு விசைபப்டகு மீனவர் நல சங்கப் பொதுச்செயலாளர் போஸ், இத்தனைக் காலமும் ஏராளமான சம்பவம் நடந்தும் வழக்கு போடாத தமிழக பொலிசார் இப்போது வழக்கு பதிவுசெய்திருப்பது தேர்தல் வரவிருப்பதை முன்னிட்டு நடத்தும் அரசியல் நாடகம் என்று கூறினார்.

இந்த நடவடிக்கையால் மீனவர்களுக்கு நன்மை விளையப்போவதில்லை என்றும், மாறாக தமிழக மீனவர்கள் மீதான வெறுப்புணர்வே இலங்கை கடற்படைக்கும், இலங்கை மீனவர்களுக்கும் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.