ராஜீவோடு கொல்லப்பட்டோரின் உறவினர் உச்சநீதிமன்றத்தில் மனு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக ராஜீவ் கொல்லப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார்கள்.

ராஜீவ் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரான அப்பாஸ் மற்றும் ஜான் ஜோசப் உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் இந்த பொதுநல வழக்கை தொடுத்துள்ளனர்.

தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுவிப்பதாக எடுத்த முடிவிற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை மார்ச் மாதம் 6ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

அப்போது இந்த மனுவின் விசாரணையும் நடைபெறும் என்று தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

மனுவின் வாத அடிப்படை

ஒரு தண்டனையை குறைக்கவோ, மன்னிப்பு அளிக்கவோ அல்லது மாற்று தண்டனை அளிக்கவோ குற்றப்பிரிவியல் சட்டங்கள் 432, 433, 435 மற்றும் 433A வரையறை பகுதியின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 72 இன்படி தண்டனை பெற்றவர்களுக்கு கருணை அளிக்கும் அதிகாரம் இந்திய குடியரசுத்தலைவருக்கு அளிக்கபட்டுள்ளது. சட்டப்பிரிவு 161இன்படி கருணை அளிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சட்டப்பிரிவுகளுக்கு முரணாக குற்றப்பிரிவியல் சட்டங்கள் 432, 433 மற்றும் 435ஆகியவை அமைந்துள்ளன.

Image caption முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனைகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து காங்கிரஸ் அரசாங்கமும் மனுத் தாக்கல் செய்துள்ளது.

இவ்வாறு இந்தியாவின் சட்டப்பிரிவு குறித்து முக்கிய கேள்விகளை இந்த வழக்கு எழுப்பியுள்ளதால் இது ஒரு அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதியோ அல்லது ஆளுநரோ நிராகரித்த விதம் சரியல்ல என்று உச்சநீதிமன்றம் கருதுமானால் அந்த கருணை மனுக்களை மீண்டும் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் ஆகியவர்களிடம் தான் மறுபரிசீலனைக்காக அனுப்ப வேண்டுமே தவிர அதில் உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட முடியாது என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று தீர்ப்பளித்திருந்தது.

தமிழக அரசின் அறிவிப்பு

அதனை தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று இந்த மூன்று பேருடன் ஏற்கனவே ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த முடிவு பற்றி மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தனது பதிலை மூன்று நாட்களுக்குள் தெரிவிக்காவிட்டால், தமிழக அரசு தானாகவே அவர்களை விடுதலை செய்யும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் நடவக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

அந்த வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் அந்த விசாரணையின்போதே இந்த மனுவின் விசாரணையும் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.