திமுக தலைமைக் கூட்டணிக்கு 'ஜனநாயக முற்போக்குக் கூட்டணி' என்று பெயர்

திமுக தலைமைக் கூட்டணிக்கு 'ஜனநாயக முற்போக்குக் கூட்டணி' என்று பெயர்
Image caption திமுக தலைமைக் கூட்டணிக்கு 'ஜனநாயக முற்போக்குக் கூட்டணி' என்று பெயர்

திமுக தலைமையிலான அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கு 'ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என பெயரிடப்பட்டுவதாக திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று புதன்கிழமை சென்னையில் அறிவித்தார்.

இன்று சென்னையில் நடைபெற்ற திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக்கு பெயரிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மற்றக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, அதன் தலைமையிலான கூட்டணி இனி 'ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என அழைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துகொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், தேர்தல் பிரச்சாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது மேலும் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, சில கூட்டணிக் கட்சிகளில் அதன் தலைமை மற்ற கட்சிகளின் கோரிக்கையை ஏற்பதும் இல்லை, அவர்களுக்கு சரியான மதிப்பையும், அங்கீகாரத்தையும் வழங்குவது இல்லை என்று குற்றம் சாட்டினார்.

ஆனால் திமுக கட்சி என்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதாக தெரிவித்த அவர், தேர்தலுக்கான சந்தர்ப்பவாத கூட்டணியை ஒருபோதும் இக்கட்சி ஏற்காது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களின் நலனுக்ககாக உழைக்கும் திமுக கட்சி, தற்போது அமைத்துள்ள 'ஜனநாயக முற்போக்கு கூட்டணி' மூலம் ஒருங்கிணைந்து தேர்தலுக்காக மட்டும் இல்லாமல் பின்னரும் நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நடந்து முடிந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இது குறித்து பிபிசியிடம் பேசிய போது கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே வியூகத்துடன் செயலாற்ற முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.