ராஜிவ் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யத் தடை நீட்டிப்பு

படத்தின் காப்புரிமை AFP
Image caption ராஜிவ் கொலை: தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யத் தடை நீடிப்பு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், அவர்களை விடுவிக்க வழங்கப்பட தடை மார்ச் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு தொடர்பில் நடைபெற்ற விசாரணை, இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி, ரமணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, 435 சட்டப் பிரிவின்படி இந்த வழக்கில் விடுதலை செய்வது தொடர்பில் மத்திய அரசின் முடிவு முக்கியமானது என்றார்.

அதோடு தமிழக அரசின் பதில் மனுவுக்கு மத்திய அரசு தரப்பின் பதிலை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். அப்போது இது குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள் அரசின் பதில் மனுக்களை விட குற்ற விசாரணை முறைச் சட்ட விதிமுறைகளுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்றனர்.

தமிழக அரசின் பதில் மனுவை கடந்த 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தாக்கல் செய்துள்ள மனுவிற்கு இன்று வியாழக்கிழமை மத்திய அரசு தரப்பு பதிலளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து இந்த வழக்கு வரும் மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த எழு பேரை விடுவிக்க வழங்கப்பட தடை மார்ச் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் இந்த விடுதலை செய்யும் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. அப்போது விசாரணையை நடத்திய உச்சநீதிமன்ற அமர்வு இது குறித்த தமிழக அரசின் பதிலை அளிக்கவும் கோரியிருந்தது.

இது தொடர்பில், தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணாவால் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 432, 433ஏ ஆகியவற்றில் கூறியுள்ளது போல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், அதில் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.