விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள்: திமுக

திருமாவளவன்
Image caption திருமாவளவன்

எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிப் பங்கீட்டில் மேலும் ஒரு தொகுதியை சேர்த்து மொத்தம் இரண்டு தொகுதிகளை வழங்குவதாக திமுக அறிவித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதியை மட்டுமே முதலில் திமுக ஒதுக்கியிருந்தது.

சென்றமுறை கூட்டணிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த தமது கட்சிக்கு இம்முறை ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் கட்சித் தொண்டர்களும் அதிருப்தி அடைந்திருந்தனர்.

இந்நிலையில், தொல். திருமாவளவனுக்கும், திமுக தலைவருக்கும் இடையே கடைசியாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பட்டியல் இனத்தாருக்கென ஒதுக்கப்பட்டுள்ள திருவள்ளூர் தொகுதியையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ள திமுக தலைமையிலான கூட்டணியின் மற்ற கட்சிகளான, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுக்கு தொகுதிப் பங்கீட்டில் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.