நாடாளுமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திமுக தலைவர் கருணாநிதி
Image caption திமுக தலைவர் கருணாநிதி

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி திங்களன்று வெளியிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவின் 35 அதிகாரப்பூர்வ வேட்பாளர்களளின் பெயர் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இக்கூட்டணியின் தேர்தல் அறிக்கை செவ்வாய்கிழமை வெளியிடப்படும் எனவும் அவர் அப்போது அறிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சி ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இடஒதுக்கீடு பெற்றுள்ளன.

அதன்படி விடுதலை சிறுத்தைகளுக்கு திருவள்ளூர் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியும், மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியும் மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் இறுதியாகியுள்ளது.

ஒதுக்கப்பட்ட இந்த ஐந்து தொகுதிகள் தவிர மீதமுள்ள அனைத்து 35 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பெயர் பட்டியலில் திமுக வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மக்களவை தேர்தலுக்கான இந்த வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து, சென்னை ஆலந்தூர் தொகுதில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக்கான இடைதேர்தலுக்கான வேட்பாளராக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி போட்டியிடுவார் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதியிடம் இடதுசாரி கட்சிகள் தொடர்பில் கேட்கப்பட கேள்விக்கு அவர் பதிலளிகையில், அவர்கள் நேரடியாக திமுகவிடம் எந்தவிதமான பேச்சு வார்த்தையிலும் தற்போது வரை ஈடுபடவில்லை என்றார்.

இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளராக அப்துல் ரகுமான், வேலூர் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

அதேபோல் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக மயிலாடுதுறையில் எஸ்.ஹைதர் அலி போட்டியிடுவார் எனவும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.