ஆயிரத்தில் ஒருவன் குறித்த அரசியல் சர்ச்சை

  • 13 மார்ச் 2014
ஆயிரத்தில் ஒருவன் குறித்த அரசியல் சர்ச்சை
Image caption ஆயிரத்தில் ஒருவன் குறித்த அரசியல் சர்ச்சை

அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் 1965 இல் வெளியாகிய 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை மறுவெளியீடு செய்யப்பட உள்ள நிலையில், அந்த படம் குறித்த ஒரு அரசியல் சர்ச்சை தொடங்கியிருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்துக்கு பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், இந்தியாவில் இந்த ஏப்ரலில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ''மாதிரி நன்னடத்தை விதி மீறல்'' என கூறி அவற்றை அகற்றிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகிய இரு அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை கொண்ட இந்தச் சுவரொட்டிகள், திரைப்படங்களுக்கான விளம்பரம் தான் என்ற போதிலும், இவர்கள் அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவின் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆனால் இந்தத் திரைப்படத்தின் விளம்பரங்களை திரையரங்கு வளாகங்களுக்குள் அமைத்துக் கொள்ள முடியும் என்றும், திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கப்படாது என்றும் அவர் அப்போது தெரிவித்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பானர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து போராடும் இளைஞனின் கதையை கொண்டு 1965 இல் வெளியாகிய இந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம், அப்போதே மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம். கருப்பு வெள்ளை திரைப்படமாக இல்லாமல் கலரில் உருவாகிய இந்த படத்திற்கு கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுதினார்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த இந்த படத்தை பந்துலு டைரக்ட் செய்தார்.

ஆழமான கருத்துக்களை கொண்ட பாடல்கள், படத்தின் வெற்றிக்குத் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. திரைப்படத்துக்காக அந்தக் காலக்கட்டத்தில் கப்பலில் அமைக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாக அப்போது விமர்சனங்கள் வெளியாயின. தற்போதும் இந்தத் திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட பிறகு இன்னமும் பிரமாண்டமாக காட்சியளிப்பதாக, இப்போது இப்படத்தை வெளியிடும் திரைப்பட விநியோகிஸ்தர் சொக்கலிங்கம் பிபிசியிடம் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலுக்கான மாதிரி நன்னடத்தை விதி மீறல் என கூறி இந்தப் படத்தின் விளம்பர சுவரொட்டிகள் அகற்றப்படுவது குறித்து விநியோகிஸ்தர் சொக்கலிங்கத்திடம் கேட்டதற்கு, அரசியல் நோக்கத்திற்காக இந்த திரைப்படத்தை வெளியிட முற்படவில்லை என்றும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே தற்போது இந்த வெளியீடு திட்டமிடப்பட்டதாகவும் கூறினார். விளம்பரம் இல்லாமல் திரைப்படத்தை வெற்றியடைய செய்வது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இந்த நடவடிக்கை தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்தில் இது தொடர்பான சர்ச்சைகள் அனைத்து தரப்பிலும் விவாதமாக தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.