தமிழகம் புதுவையில் 18 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் படத்தின் காப்புரிமை CPI
Image caption இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம்

நடைபெறும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின்போது இந்த இருகட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுச்சேரி, கடலூர், திருவள்ளூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய ஒன்பது தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, வடசென்னை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 18 தொகுதிகளிலும் இந்த இரு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார்.

இந்த இருகட்சிகளுக்கான மக்களவை தேர்தல் அறிக்கையை, கட்சிகளின் தலைமைகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன என்றும், அவற்றின் தமிழாக்கப் பிரதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைமை வரும் 16ஆம் தேதி வெளியிடும் என தா பாண்டியன் தெரிவித்தார்.

அதேபோல் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமது கட்சியின் மக்களவைத் தேர்தல் அறிக்கையின் தமிழாக்க பிரதி எதிர்வரும் 17ஆம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இந்த இரு கட்சிகளின் மாநில தலைவர்களும் கூட்டாக வெள்ளியன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, தேர்தல் பிரச்சாரம் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியதோடு, போட்டியிடும் இந்த 18 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் வேறு எந்த கட்சிகளுக்கும் தாம் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் கூறினர்.