பெண்களுக்கு எதிரானவன் என்று தன்மீது அவதூறு என்கிறார் சசி தரூர்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption "பெண்களுக்கு எதிரானவன் என்று அவதூறு" --சசி தரூர்

இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை துணைஅமைச்சர்,சசி தரூர், தனது அரசியல் எதிரிகள் தனக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் மேற்கொள்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் சசி தரூர், தனது எதிரிகள் தன்னை பெண்களுக்கு எதிரானவர் என்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த சசி தரூர், அம்மாநிலத்திலிருந்து, இந்திய மக்களவைக்கு தனது தொகுதியை தக்கவைத்து கொள்ள, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நிலையில், கேரள மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை இந்த புகாரை அளித்தார்.

‘பெண்களுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு நபராக என்னை சித்தரிக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். என் மனைவியின் மரணம் தொடர்பில் தவறான கதைகளை உருவாக்கி என் தனிப்பட்ட குணநலன் மீது அவதூறு விளைவிக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்’, என்றார் சசி தரூர்.

சமீபத்தில் தனியார் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளிவந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான சுனில் குமார் மற்றும் எம்.விஜயகுமார் ஆகியோரின் கருத்துக்களைத் தொடர்ந்து இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லியில் தனது ஹோட்டல் அறையில் இறந்து காணப்பட்டார். அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதால் சுனந்தா இறந்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் சசி தரூரின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான தகவல்கள் சசி தரூர் திருமணத்திற்கு வெளியிலான தொடர்பு வைத்துள்ளார் என்ற சர்ச்சையை எழுப்பியிருந்தது.