வருமான வரி வழக்கு: ஜெயலலிதா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Image caption வருமான வரிக் கணக்கு வழக்கு --நேரில் ஆஜராக உத்தரவு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் 3ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆண்டில் வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என சென்னை பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் வருமான வரித் துறையால் 1996ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.

அதற்குப் பிறகு அதே 93-94 ஆண்டில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என சசிகலா மீதும் 1997ல் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.

அதேபோல, 91-92, 92-93 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல்செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை.

இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன.

பிறகு, உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டிருப்பதால், வழக்கை மேலும் 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இதனை எதிர்த்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், இது வழக்கை இழுத்தடிக்கும் செயல் என்றும், விளக்கம்கோரும் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தடை ஏதையும் வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து ஜெயலலிதா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, வழக்கு மீண்டும் ஏப்ரல் 3ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அன்று குற்றம் சுமத்தப்படுவதற்காக ஜெயலலிதாவும் சசிகலாவும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.