இந்தியா மூத்த பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங் காலமானார்

படத்தின் காப்புரிமை PTI
Image caption குஷ்வந்த் சிங்

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான, குஷ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 99.

தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ஹடாலி என்ற இடத்தில் பிறந்தவரான குஷ்வந்த் சிங், "தெ இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஒப் இந்தியா" சஞ்சிகையின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் அவர் "நேஷனல் ஹெரால்ட்" மற்றும் " ஹிந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.

எழுத்தாளருமான அவர், இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து எழுதிய " ட்ரெயின் டு பாகிஸ்தான்" என்ற புதினம் மிகப் பிரபலமானது.

பின்னர் அவர் வேறு பல புதினங்களையும், " சீக்கியர்களின் வரலாறு" என்ற புத்தகத்தையும் எழுதினார்.

1980லிருந்து 1986 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் குஷ்வந்த் சிங்.

இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவில் விருதான பத்ம விபூஷண் விருது இவருக்கு 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இவருடைய மற்ற படைப்புகளில் "ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்" (நைட்டிங்கேல் பறவையின் பாடலை நான் கேட்கமாட்டேன்), ‘ட்ராஜெடி ஆப் பஞ்சாப் ‘(பஞ்சாபின் அவலம்) போன்றவை மக்கள் மத்தியில் மிக பிரபலமானவை.

தனது 98வயதில் அவர் வெளியிட்ட ‘குஷ்வந்த்நாமா’ என்ற நூல்தான் அவருடைய கடைசி நூலாகும்.